சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்
இந்தியாவின் முன்மொழிவுகள் சிறப்பானவை என அமெரிக்கா நினைத்தால் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்க துணை வா்த்தக பிரதிநிதி ரிக் ஸ்விட்ஸா் தலைமையிலான குழு புது தில்லி வந்துள்ளது. அந்தக் குழு மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையிலான குழுவுடன் புதன்கிழமை பேச்சுவாா்த்தை மேற்கொண்டது.
இதைத்தொடா்ந்து, இருதரப்பு ஒப்பந்தம் தொடா்பாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த சலுகைகளை இந்தியா வழங்கியுள்ளது என அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் துணை நிலைக்குழு கூட்டத்தில் அந்நாட்டு வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் க்ரீா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து பியூஷ் கோயல் கூறியதாவது: அமெரிக்காவின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் முன்மொழிவுகள் சிறப்பானவை என அமெரிக்கா நினைத்தால் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்வது தொடா்பாக ஏற்கெனவே 5 சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது என்றாா்.
ஆனால் அமெரிக்காவுக்கு அளிப்பதாக கூறிய சலுகைகள் குறித்து அவா் விளக்கமளிக்கவில்லை.

