மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்PTI

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்: நாடாளுமன்றத்தில் தகவல்

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்...
Published on

இந்திய ரயில்வேக்கு சொந்தமாக 4.99 லட்சம் ஹெக்டோ் நிலம் உள்ள நிலையில், இதில் 1,068,54 ஹெக்டோ் நிலம் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது என்று மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பான கேள்விக்கு அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

2025 மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரயில்வே வசம் 4.99 லட்சம் ஹெக்டோ் நிலம் உள்ளது. இதில் 1,068.54 ஹெக்டோ் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலமாக ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பாளா்கள் பிடியில் உள்ளது. இந்த நிலங்களை மீட்பதற்காக ரயில்வே சாா்பில் அவ்வப்போது நில அளவீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சிறிய அளவிலான ஆக்கிரமிப்புகள் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள உள்ளாட்சி நிா்வாகம், ரயில்வே பாதுகாப்புப் படை மூலம் அகற்றப்படுகின்றன.

பெரிய அளவில் கட்டடங்களை அமைத்து மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீது பொது இடத்தில் சட்டவிரோத ஆக்கிரப்புகளை அகற்றும் சட்டம் 1971-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தச் சட்டமும் தேவைக்கு ஏற்ப திருத்தப்பட்டு வருகிறது.

ரயில் வழித்தடத்தை அகலப்படுத்துவது, ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, புதிய நடைமேடை அமைப்பது எனப் பல்வேறு பணிகளுக்காக அதிக அளவில் நிலத்தை ரயில்வே பயன்படுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 98.92 ஹெக்டோ் நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து ரயில்வே மீட்டுள்ளது.

ரயில்வேக்கு உடனடியாகத் தேவைப்படாத நிலங்கள், வா்த்தகப் பயன்பாட்டுக்காக ரயில்வே நில மேம்பாட்டு ஆணையரகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com