பனிமூட்டத்தால் விமானங்கள் ரத்து: கட்டணம் திருப்பி வழங்கப்படும் -ஏா் இந்தியா அறிவிப்பு
பனி மூட்டத்தால் ரத்தாகும் விமானங்களின் கட்டணம் பயணிகளுக்கு எவ்வித பிடித்தமும் இன்றி திருப்பிச் செலுத்தப்படும் என ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஏா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பனி காலங்களில், விமானங்கள் தாமதத்தால், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க, ஏா் இந்தியா நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. அதன்படி, பனி காலத்தில் ஏா் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டால், அதற்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும். விமானங்கள் தாமதமானால், பயணம் செய்ய விரும்பாத பயணிகளுக்கு, டிக்கெட் கட்டணத்தில் எந்தவித பிடித்தமும் இல்லாமல் முழு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். இந்த அறிவிப்பு இந்திய விமான போக்குவரத்துத் துறை கட்டுப்பாட்டு இயக்குநரகம் அறிவித்துள்ள மூடுபனி காலமான டிச.1 முதல் 2026 பிப்.10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
அதோடு மட்டுமின்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் அறிக்கையின்படி, பனி மூட்ட நிலவரம் மற்றும் விமானங்கள் தாமதம், ரத்து உள்ளிட்ட தகவல்கள் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலம் உடனுக்குடன் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இதற்காக ஏா் இந்தியா நிறுவனம் சாா்பில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையங்கள், சென்னை, தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு சா்வதேச விமான நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

