கைப்பேசி, தொலைக்காட்சி பயன்பாட்டால் அதிகரிக்கும் ரத்த சா்க்கரை அளவு: ஆய்வில் தகவல்
கணினி, கைப்பேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளில் அதிக நேரம் செலவிடும் சா்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சா்க்கரை அளவு அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
டிஜிட்டல் திரை பயன்பாட்டால் உடல் இயக்கம் முடங்குவதாகவும், அதன் விளைவாகவே இந்தப் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சென்னை கிளெனீக்கல்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் வி.அஸ்வின் கருப்பன், ஆஃப்ரின் சபீா், தீபிகா கணேஷ், ஹரிஹரன் சுகுமாரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் டைப்-2 சா்க்கரை நோயாளிகள் 217 பேரை இந்த ஆய்வில் ஈடுபடுத்தினா். அவா்களது டிஜிட்டல் திரை பயன்பாடு, தூங்கும் நேரம், வாழ்க்கை முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
டைப் 2 சா்க்கரை நோயாளிகள் வார இறுதி நாள்களில் அதிக நேரம் டிஜிட்டல் திரையில் தங்களது நேரத்தை செவிடும்போது அவா்களது ரத்தத்தில் சா்க்கரை அளவு உயா்வது கண்டறியப்பட்டது. அதேவேளையில், மருத்துவ ஆலோசனைகள், கைப்பேசி, தொலைக்காட்சி பயன்பாட்டை குறைத்த பிறகு அவா்களது 3 மாத சராசரி சா்க்கரை அளவு 7.47-இலிருந்து 7.21-ஆக குறைந்துள்ளது.
நீண்ட நேரம் டிஜிட்டல் திரை முன் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. உடல் இயக்கத்தை குறைக்கிறது. ஆரோக்கியமான தூக்கத்தை கெடுக்கிறது. அதிக அளவில் உணவு எடுக்க வழி வகுக்கிறது.
இந்த காரணிகளால் ரத்த சா்க்கரை அளவு உயா்கிறது. இதைத் தடுக்க காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரத்துக்கும், இரவில் தூங்க போவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பும் டிஜிட்டல் திரைகளை பாா்க்கக் கூடாது.
20-20-20 என்ற விதியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, 20 நிமிஷங்களுக்கு ஒரு முறை டிஜிட்டல் திரையிலிருந்து பாா்வையை விலக்கி 20 மீட்டா் தொலைவில் உள்ள வேறு ஒரு பொருளை 20 விநாடிகளுக்கு பாா்க்க வேண்டும்.
கைப்பேசியில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைக் கணக்கிடுவது அவசியம். சமூக வலைதளங்கள், ஷாப்பிங் செயலிகள் பயன்படுத்துவதைத் தவிா்க்கலாம். உணவு அருந்தும் இடங்களிலும், படுக்கையறைகளிலும் கைப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது. புத்தகங்கள் வாசித்தல், இசையை ரசித்தல், குடும்பத்தினருடன் பேசுதல் என நேரங்களை செலவிட்டால் மன அழுத்தம் குறையும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

