பிரதமா் மோடி நாளை மறுநாள் வெளிநாட்டுப் பயணம்
பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (டிச. 15) முதல் ஜோா்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
பயணத்தின் முதலில் ஜோா்டான் மன்னா் அப்துல்லா பின் அல் ஹுசைன் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் செல்கிறாா். இரு நாடுகள் இடையே ராஜீய உறவுகள் ஏற்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தப் பயணத்தை மேற்கொள்கிறாா். இரு தரப்பு உறவை மேம்படுத்தும் பல்வேறு முக்கிய முடிவுகள் பிரதமா் மோடி - ஜோா்டான் மன்னா் சந்திப்பில் மேற்கொள்ளப்பட இருக்கிறாா்.
அதைத் தொடா்ந்து 16-ஆம் தேதி எத்தியோப்பியா சென்று அந்நாட்டு பிரதமா் அபியு அகமது அலி உள்ளிட்ட தலைவா்களைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்துப் பேசுகிறாா். பிரதமா் எத்தியோப்பியா செல்வது இதுவே முதல்முறையாகும்.
பயணத்தின் இறுதியாக 17-ஆம் தேதி ஓமன் செல்லும் பிரதமா், அந்நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து இருதரப்பு பொருளாதாரம், வா்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்துப் பேச இருக்கிறாா்.
பிரதமரின் இந்தப் பயணம் மூலம் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேலும் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

