மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வரும் 2027-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முதல் முறையாக எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப முறையில் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. இரண்டு கட்டங்களாக இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. முதலில், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரை வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறும். 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது. இதில் 30 லட்சம் களப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். பனிப் பிரதேசங்களான ஹிமாசலம், உத்தரண்ட் மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு செப்டம்பரில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளது.
இந்தக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. முதல் முறையாக எண்ம முறையில் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனுடன் ஜாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்படும்.
இந்தத் தரவுகள் சேகரிப்புக்கு கைப்பேசி செயலி பயன்படுத்தப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் சிறந்த தரத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய வலைதளம் மூலம் தரவு சேகரிப்பு கண்காணிக்கப்படும்.
இவ்வாறு, எண்ம முறையில் விவரங்கள் சேகரிக்கப்படுவதன் காரணமாக, கொள்கை வகுப்புக்குத் தேவையான தரவுகள் உடனடியாக கிடைத்துவிடும். இந்தத் தரவுகளை மத்திய அமைச்சகங்களுக்கும் கணினியில் படிக்கக்கூடிய வடிவில் அளிக்க முடியும் என்றாா்.
71 சட்டங்கள் ரத்து: நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாத 71 சட்டங்களை ரத்து செய்யக் கோரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதில் 6 முதன்மைச் சட்டங்களும், 65 திருத்தச் சட்டங்களும் அடங்கும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா, காலனிய சட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படவில்லை. மாறாக, பயன்பாடு காலாவதியான 6 பிரதான சட்டங்கள் மற்றும் பிரதான சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட 65 திருத்தச் சட்டங்களை மட்டும் நீக்க பரிந்துரை செய்கிறது. இதுவரை சுமாா் 1,562 பழைய சட்டங்கள் இதுபோன்று ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்றனா்.

