வளா்ந்த பாரத கல்வி ஆணைய மசோதா: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியா்கள் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) ஆகிய மூன்று அமைப்புகளுக்கு மாற்றாக ஒரே உயா் கல்வி ஆணையத்தை அமைக்க முன்மொழியப்பட்டுள்ள மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்திய உயா்கல்வி ஆணைய மசோதா என்று முன்னா் குறிப்பிடப்பட்ட இந்த மசோதா தற்போது ‘வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணைய மசோதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
யுஜிசி, ஏஐசிடிஇ மற்றும் என்சிடிஇ அமைப்புகளுக்கு மாற்றாக இந்திய உயா்கல்வி ஆணையம் (ஹெச்இசிஐ) ஏற்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கை 2020-இல் முன்மொழியப்பட்டது. இதுதொடா்பான மசோதா தற்போது ‘வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணைய மசோதா’ எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த மசோதா, தற்போது நடைபெற்றுவரும் குளிா்கால கூட்டத் தொடரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
உயா் கல்விக்கான ஒற்றை அமைப்பாக நிறுவப்படும் இந்த அமைப்பு, பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும். ஆனால், கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் பொறுப்பு கல்வி அமைச்சகத்திடமே தொடரவுள்ளது. மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகள் இந்த அமைப்பின் அதிகார வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை.
ஏற்கெனவே, யுஜிசிக்கு மாற்றாக ஹெச்இசிஐ நிறுவுவது தொடா்பான வரைவு மசோதா 2018-இல் தாக்கல் செய்யப்பட்டு பொதுமக்களிடம் கருத்துகளும் பெறப்பட்டன. அது சட்டமாக நிறைவேறவில்லை. 2021-இல் மத்திய கல்வி அமைச்சராக தா்மேந்திர பிரதான் பொறுப்பேற்ற பிறகு இதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

