

அமெரிக்க குடியுரிமை பெற 9 கோடி ரூபாய் செலுத்தி ‘தங்க அட்டை’ (கோல்டு காா்டு) பெறும் திட்டத்தை அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும் நிலையில், இந்தியர்களுக்கு இது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நாட்டு மக்களின் மீது கொண்ட அதிதீவிர பாசம் காரணமாக கொண்டுவந்த பல திட்டங்களில் இதுவும் ஒன்று. கடந்த செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் இன்று நடைமுறைக்கும் வந்துவிட்டது.
அமெரிக்க அரசுக்கு தனிநபர் அளிக்கும் ரூ.9 கோடி என்பது ஒருபோதும் திரும்ப வழங்கப்படாது. ஆனால், தங்க அட்டை பெற்றவர்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ, குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ குடியுரிமை ரத்து செய்யப்படும்.
அமெரிக்க வாழ்க்கைக்கான கதவுகளைத் திறவுங்கள், அப்ளை செய்யுங்கள் என்று, அமெரிக்க தங்க அட்டை விண்ணப்பத்துக்கான இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தங்க அட்டை திட்டம் உண்மையில் அமெரிக்க கனவை நிஜமாக்குமா? இந்தியர்களுக்கும் ஜொலிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியர்களுக்கு, இந்த இணையதளத்தில் இருக்கும் அப்ளை நௌ என்பது, உடனடியாக குடியுரிமை விசா கிடைக்கும் என்ற அர்த்தத்தைக் கொடுக்காது என்றே கூறப்படுகிறது. காரணம், குடியுரிமை விசா கோரி காத்திருப்போர் பட்டியல் ஏற்கனவே நீளும் நிலையில், தற்போது விண்ணப்பித்தால், பல ஆண்டுகள் ஏன் பத்தாண்டுகளுக்கு மேல் கூட ஆகலாம் என்கின்றன வெளியாகும் தரவுகள்.
முதலில், இந்த கட்டணமே மிகப்பெரிய தொகை. ஒரு மில்லியன். அதாவது ரூ.9 கோடி. இதில்லாமல் ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் செயல்பாட்டுக் கட்டணமாக 15 ஆயிரம் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும். இவ்வாறு ஒரு ஊழியர் சென்றால், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் உடன் செல்வதாக இருந்தால், வாழ்க்கைத் துணைக்கு ரூ.9 கோடி + 15 ஆயிரம் டாலர் கட்டணம், பிள்ளைகளுக்கு மேலும் ரூ.9 கோடி + 15 ஆயிரம் டாலர் கட்டணம் செலத்த வேண்டும். இப்படி 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் அமெரிக்காவில் குடியேற ரூ.36 கோடி மற்றும் தலா ரூ.15 ஆயிரம் டாலர் செலுத்த வேண்டும். இதில்லாமல், அவர்களுக்கான ஆவணங்களைத் தயார் செய்ய தேவைப்படும் தொகையைக் கணக்கிட்டால் செலவு எங்கேயோ போகும்.
இதுபற்றி, அதிகாரப்பூர்வ அமெரிக்க இணையதளத்திலேயே தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தன்னுடைய வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளையை அழைத்து வருவதாக இருந்தால், அவர்களும் தனித்தனி விண்ணப்பதாரர்களாகவே கருதப்படுவர் என்று கொட்டை எழுத்துகளில் வெளியிட்டுள்ளது.
இது ஏற்கனவே அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த முதலீட்டாளர்களுக்கான இபி-5 விசாவுக்கு மாற்றாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்த விசாவில் வேலை வாய்ப்பு அவசியமில்லை.
இந்த திட்டம், டிரம்ப் தங்க அட்டை, டிரம்ப் பெருநிறுவன தங்க அட்டை, டிரம்ப் பிளாடினம் அட்டை என மிக விரைவாக செயல்பாடுகள் மற்றும் குடியுரிமை சலுகைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிறுவனங்கள், ஒரே ஒரு தங்க அட்டைக்குத்தான் விண்ணப்பிக்க முடியும். இதற்கே ரூ.18 கோடி. கூடுதலாக விண்ணப்பிக்க இந்தக் கட்டணமே மேலும் அதிகரிக்குமாம்.
தாமதம் ஏன்?
எனவே, ஒவ்வொரு நாட்டிலிருந்தும், க்ரீன் கார்டு மற்றும் தங்க அட்டை பெற விண்ணப்பித்திருக்கும் இந்தியர்கள், மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களைவிட அதிக நாள்கள் மன்னிக்கவும் அதிக ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்படலாம் என்றும், 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாத விசா தரவுகளில் இபி-1 இந்தியா பிரிவில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 15ல் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகிறது என்கிறது. அப்படியானால், 2025 டிசம்பரில் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதே கேள்வி.
இதில், இபி-2 விண்ணப்பத்தின் நிலை மிகவும் மோசமாம். இந்த விண்ணப்ப செயல்பாடுகளில் 2013ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிலுவையில் உள்ளதாம். அதாவது, இந்த காலத்தில் விண்ணப்பித்திருந்தால்தான் தாற்போது விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
எனவே, இபி-1, இபி-2, க்ரீன் கார்டு, தங்க அட்டை என எல்லாம் ஒரே வரிசையில்தான் அதாவது மிக நீண்ட வரிசையில் செல்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்க சில, பல ஆண்டுகள் ஆகலாம் என்பதே தரவுகளின் கணிப்பாக உள்ளது.
இந்த அட்டையை அறிமுகம் செய்த டிரம்ப், இந்த தங்க அட்டை, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வெளிநாட்டினா் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வழங்கப்படும் கிரீன் காா்டு திட்டத்தைக் காட்டிலும் மிகச் சிறந்தது, சக்திவாய்ந்தது என புகழ்ந்திருந்தார்.
தனிநபா் ஒருவர், அமெரிக்க அரசுக்கு ரூ.9 கோடி (மில்லியன் டாலா்) செலுத்தி தங்க அட்டை பெறலாம். அமெரிக்க நிறுவனங்களோ ஒரு ஊழியருக்கு ரூ.18 கோடி அதாவது இரண்டு மில்லியன் டாலர் செலுத்தி தங்க அட்டையைப் பெற்று பணிக்கு அமா்த்திக்கொள்ள வேண்டும். ஆனால், இந்த தங்க அட்டையைப் பெறுபவா்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகே, அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கான தகுதியைப் பெறுவா் என்றும் விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றதுமுதல் பல அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறாா். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராகவும், இந்தியர்களுக்கு எதிராகவும் எடுத்திருக்கும் நடவடிக்கைதான் அதிகம் என்றுகூட சொல்ல முடியும்.
பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா உள்பட பல நாடுகள் மீது அதிரடி வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா். இதன் காரணமாக, சீனா போன்ற வேறு நாடுகளுடன் வா்த்தகத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியது. வைரம் முதல் திருப்பூர் பின்னலாடை முதல் பல துறைகள் இழப்பை சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.