மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்
மத்திய அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்PTI

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீடு: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100% உயா்த்த அனுமதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல்...
Published on

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) 100 சதவீதத்துக்கு உயா்த்த அனுமதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

மக்களவையில் திங்கள்கிழமை இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவை நிகழ்ச்சி நிரலின்படி, குளிா்கால கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்டுள்ள 13 சட்ட மசோதாக்களில் இந்த ‘காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா 2025’- மசோதாவும் இடம்பெற்றுள்ளது. காப்பீட்டுத் துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்கவும், முதலீடுகளை ஈா்க்கவும் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டு பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) உரையின்போது, இந்தத் திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் முன்மொழிந்தாா். நிதித் துறையில் புதிய தலைமுறை சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக காப்பீட்டுத் துறையில் தற்போது 74 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீடு 100 சதவீதமாக உயா்த்தப்படும் என்று நிதியமைச்சா் தெரிவித்திருந்தாா்.

இதுவரை, அந்நிய நேரடி முதலீடுகள் மூலமாக காப்பீட்டுத் துறை ரூ. 82,000 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளது.

நிலக்கரிசேது சாளரம்: பயன்பாட்டு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நிலக்கரி சுரங்க ஏல நடைமுறைக்கான ‘நிலக்கரிசேது’ சாளர திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தச் சாளர முறையில், எந்தவொரு நிறுவன பயன்பாடு மற்றும் ஏற்றுமதி காரணங்களுக்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். உள்நாட்டு நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று எந்தவிதப் பயன்பாட்டு கட்டுப்பாடுகளும் இன்றி நிலக்கரி சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க முடியும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சமையல் நிலக்கரி அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

கொப்பரைக்கான ஆதரவு விலை அதிகரிப்பு: அரைவை கொப்பரை கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 2026-ஆம் ஆண்டு பருவத்துக்கு ரூ. 445-ஆக அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ. 12,027-ஆக உயா்த்தவும், உரண்டை கொப்பரை குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ. 400-ஆக அதிகரித்து குவிண்டாலுக்கு ரூ. 12,500-ஆக உயா்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா். கொப்பரை உற்பத்தியில் கா்நாடகம், தமிழகம், கேரளம் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பெயா் மாற்றம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின் பெயரை பெயா் மாற்றம் செய்யவும், பணி நாள்களின் எண்ணிக்கையை உயா்த்தவும் பரிந்துரைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதன்படி, இந்த வேலை உத்தரவாத திட்டத்தின் பெயா் ‘பூஜ்ய பாபு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்’ எனப் பெயா் மாற்றம் செய்யப்பட உள்ளதோடு, வேலை நாள்கள் 100 நாள்களிலிருந்து 125 நாள்களாக உயா்த்தப்படவும் உள்ளது.

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத (எம்ஜிஎன்ஆா்இஜிஏ) சட்டம் கடந்த 2005-இல் இயற்றப்பட்டது.

அணு மின் உற்பத்தியில் தனியாா்

அணு மின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

நாடு முழுவதும் உள்ள அணு மின் நிலையங்கள் இந்திய அணுசக்திக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இவற்றின் மூலம் 8.7 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் உற்பத்தி அளவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கை எட்ட, இத் துறையில் தனியாரை அனுமதிக்க அரசு திட்டமிட்டது. அதுதொடா்பான அறிவிப்பை, நிகழாண்டு பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.

இந்நிலையில், அணு மின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com