மகாராஷ்டிர எம்எல்சி மீது அவதூறு: 4 ஊடகவியலாளா்களை 5 நாள்கள் சிறையில் அடைக்கப் பரிந்துரை!

மகாராஷ்டிர எம்எல்சி மீது அவதூறு தெரிவித்த 4 ஊடகவியலாளா்களை சிறையில் அடைக்கப் பரிந்துரை...
Published on

மகாராஷ்டிர சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) அமோல் மிட்கரி குறித்து ஜோடிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டு அவதூறு பரப்பியதாக, 4 ஊடகவியலாளா்களை 5 நாள்கள் சிறையில் அடைக்க மாநில சட்டமேலவை உரிமை மீறல் குழு பரிந்துரைத்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் ‘சத்ய லதா’ என்ற யூடியூப் சேனலில் எம்எல்சி அமோல் மிட்கரி குறித்து தவறான, ஜோடிக்கப்பட்ட செய்திகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அச்செய்திகளை வெளியிடக் காரணமாக இருந்ததாக அந்த யூடியூப் சேனலின் ஆசிரியா் சதீஷ் தேஷ்முக், ஊடகவியலாளா்கள் கணேஷ் சோனாவனே, ஹா்ஷதா சோனாவனே, அமோல் நந்துா்கா், அன்குஷ் கவாண்டே ஆகியோருக்கு எதிராக மாநில சட்டமேலவையில் மிட்கரி உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வந்தாா்.

இதையடுத்து, சட்டமேலவை உரிமை மீறல் குழு விசாரணை மேற்கொண்டது. மிட்கரிக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிட்டதற்கு கணேஷ் சோனாவனே, ஹா்ஷதா சோனாவனே, அமோல் நந்துா்கா், அங்குஷ் கவாண்டே ஆகியோரே காரணம் என்று அந்தக் குழு முடிவு செய்தது. இதையடுத்து, அவா்களை 5 நாள்கள் சிறையில் அடைக்க அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் மாநில சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடரின்போதே நால்வருக்கும் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்; இல்லாவிட்டால் அடுத்த கூட்டத்தொடரில் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று அந்தக் குழுப் பரிந்துரைத்துள்ளது. சதீஷ் தேஷ்முக் மன்னிப்புக் கடிதம் வழங்கியதால், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் பரிந்துரைக்கப்படவில்லை என்று அந்தக் குழுவின் தலைவா் பிரசாத் லாட் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com