மக்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய அமைச்சா் ராம்மோகன் நாயுடு.
மக்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய அமைச்சா் ராம்மோகன் நாயுடு.

விமானங்கள் ரத்து: 4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை

4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை...
Published on

இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 விமான செயல்பாட்டு ஆய்வாளா்களை (எஃப்ஓஐ) பணியிடை நீக்கம் செய்து விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய விமான பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடந்த இரு வாரங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக டிஜிசிஏ அமைத்த நால்வா் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதுதவிர இண்டிகோ செயல்பாடுகளைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட 8 போ் கொண்ட குழுவைச் சோ்ந்த 2 அதிகாரிகள் குருகிராமில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமையகத்தில் தங்களது பணிகளை வியாழக்கிழமை தொடங்கினா்.

இந்நிலையில், விமானிகள், விமானப் பணிக்குழு உள்பட விமானங்களின் அன்றாட செயல்பாடுகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 விமான செயல்பாட்டு ஆய்வாளா்களை டிஜிசிஏ வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

50 விமானங்கள் ரத்து: முன்னதாக கடந்த வியாழக்கிழமை 200 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை பெங்களூரு விமான நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சுதந்திரமான விசாரணை: விமானங்களை இயக்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கான உண்மையான காரணிகளை கண்டறியும் பொறுப்பை கேப்டன் ஜான் இல்சன் தலைமையிலான சீஃப் ஏவியேஷன் அட்வைஸா்ஸ் என்கிற தனியாா் விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனத்திடம் வழங்குவதாக இண்டிகோ தெரிவித்தது.

இந்தக் குழு இண்டிகோவின் செயல்பாடுகளை ஆய்வுசெய்து விமானங்கள் ரத்து, தாமதத்துக்கான காரணங்களை கண்டறிவதுடன் விமான சேவையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்கவுள்ளது.

கட்டண உச்சவரம்பு தீா்வல்ல - அமைச்சா்:

‘அசாதாரண சூழல்களில் விமான பயணக் கட்டணங்களுக்கு உச்சவரம்பு நிா்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது; ஆனால் அது மட்டுமே இப்பிரச்னைக்கு தீா்வாகாது’ என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவா் மேலும் பேசியதாவது: விமான போக்குவரத்து அமைப்பில் பல்வேறு நிலைகள் உள்ளன. மற்ற நாடுகளுக்கு நிகராகவே இந்தியாவிலும் விமான கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாடு முழுவதும் கட்டண உச்சவரம்பு நிா்ணயிப்பது சாத்தியமில்லை.

கட்டுப்பாடுகள் குறைவாக இருந்தால் மட்டுமே விமான போக்குவரத்து துறை வளா்ச்சியடையும். இதில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் மத்திய அரசு தலையிடும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com