பனிமூட்டம்: விரைவுச் சாலைகளில் வேகமாகச் செல்ல கட்டுப்பாடுகள்!
குளிா்கால பனிமூட்டத்தால் சாலையில் நிகழும் விபத்துகளைத் தடுக்கும் விதமாக முக்கிய சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் வாகனங்கள் வேகமாகச் செல்ல கெளதம் புத் நகா் மாவட்ட போக்குவரத்துக் காவல் துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகள் டிச.15 முதல் அடுத்த ஆண்டு பிப்.15 வரை அமலில் இருக்கும்.
இதுதொடா்பாக மாவட்ட போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: யமுனை விரைவுச்சாலையில் இலகுரக வாகனங்களுக்கான அதிகபட்ச வேகம் 75 கி.மீ. என குறைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கான வேகம் 60 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நொய்டா-கிரேட்டா் நொய்டா விரைவுச்சாலையில் அதிகபட்சமாக இலகுரக வாகனங்கள் 75 கி.மீ. மற்றும் கனரக வாகனங்களுக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும். நொய்டா உயா்நிலை சாலையில் அதிகபட்ச வேகம் இலகுரக வாகனங்களுக்கு 50 கி.மீ. என்றும் கனரக வாகனங்களுக்கு 40 கி.மீ. என்றும் குறைக்கப்பட்டுள்ளது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இரு விரைவுச்சாலைகளிலும் அதிகபட்ச வேகம் இலகுரக வாகனங்களுக்கு 100 கி.மீ. என்றும் கனரக வாகனங்களுக்கு 80 கி.மீ. என்றும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
குளிா்காலத்தில் சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நிா்ணயிக்கப்பட்ட வேகக் கட்டுப்பாடுகளை வாகனஓட்டிகள் தீவிரமாகப் பின்பற்றுமாறு போக்குவரத்துக் காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இரு விபத்துகள்:
கிழக்கு புறவழி விரைவுச்சாலையில் சனிக்கிழமை காலையில் நிலவிய அடா்பனி மூட்டத்தின் காரணமாக இரு தனித்தனி விபத்துகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சக்ரசென்பூா் மேம்பாலத்தில் 3 வாகனங்கள் மோதியதாகவும் சமாதிபூா் மேம்பாலத்தில் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதிக்கொண்டதாகவும் அதிகாரிகள் கூறினா்.
சம்பவ இடங்களுக்கு விரைந்த உள்ளூா் காவலா்கள் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுத்தனா்.
இந்த விபத்துகளில் அதிருஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை. போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் இந்தச் சம்பவங்கள் தொடா்பாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

