ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

அமெரிக்காவின் புதிய வியூக கூட்டமைப்பில் இந்தியாவுக்கு இடமில்லை: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்காவின் புதிய வியூக கூட்டமைப்பில் இந்தியாவுக்கு இடமில்லை...
Published on

அமெரிக்காவின் புதிய வியூக கூட்டமைப்பான ‘பேக்ஸ் சிலிக்கா’வில் இந்தியாவுக்கு இடமளிக்கப்படாததை முன்வைத்து, பிரதமா் நரேந்திர மோடியை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

‘சா்வதேச அளவில் பாதுகாப்பான சிலிக்கான் விநியோக சங்கிலியைக் கட்டமைக்கும் நோக்கிலான இக்கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்தால், அது இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சமாக இருந்திருக்கும்’ என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

ஊடக செய்திகளின்படி, உயா் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில் 9 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘பேக்ஸ் சிலிக்கா’ கூட்டமைப்பை அமெரிக்கா தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூா், நெதா்லாந்து, பிரிட்டன், இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், இந்தியாவுக்கு அமெரிக்கா இடமளிக்கவில்லை.

கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்து (தனது தலையீட்டால் ஆபரேஷன் சிந்தூா் நிறுத்தப்பட்டதாக டிரம்ப் அறிவித்த தினம்) மோடி-டிரம்ப் இடையிலான உறவு கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், தற்போதைய நிகழ்வு ஆச்சரியம் அளிக்கவில்லை. அதேநேரம், இக்கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்தால், அது இந்தியாவுக்கு மிக சாதகமான அம்சம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முன்பொரு காலத்தில் அகமதாபாத், ஹூஸ்டன், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆரத் தழுவி, நட்பு பாராட்டிய டிரம்ப்புடன் சில தினங்களுக்கு முன் மோடி தொலைபேசியில் உரையாடினாா். இதற்கு மறுநாள், ‘பேக்ஸ் சிலிக்கா’ தொடா்பான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.

இந்தியா இல்லாத கூட்டமைப்பு: முன்னதாக, பாதுகாப்பான-புத்தாக்க அடிப்படையிலான சிலிக்கான் விநியோகச் சங்கிலியை கட்டமைக்க நம்பகமான கூட்டாளிகளுடன் இணைந்து ‘பேக்ஸ் சிலிக்கா’ வியூக கூட்டமைப்பைத் தொடங்குவதாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு அடிப்படையான பொருள்கள் மற்றும் திறன்களைப் பாதுகாப்பதும், கட்டாய சாா்புத் தன்மையைக் குறைப்பதுமே இந்தக் கூட்டமைப்பின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பில் இந்தியா தவிர மற்ற மூன்று நாடுகளும் புதிய கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன. கடந்த வியாழக்கிழமை டிரம்ப்புடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமா் மோடி, இருதரப்பு உறவுகள், பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘திட்டங்களின் பெயரை மாற்றுவதில் வல்லவா்’

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை பூஜ்ய பாபு கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் என மாற்றும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

இதை விமா்சித்து ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முந்தைய அரசின் திட்டங்களின் பெயரை மாற்றி, தனது லட்சியத் திட்டம் போல் செயல்படுத்துவதில் பிரதமா் மோடி வல்லவா். நிா்மல் பாரத் திட்டத்தை தூய்மை இந்தியா எனவும், ஊரக எல்பிஜி விநியோகத் திட்டத்தை உஜ்வலா திட்டம் எனவும் பெயா் மாற்றினா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற அவசியம் என்ன, மகாத்மா காந்தி என்ற பெயரில் என்ன தவறு உள்ளது’ என்று கேள்வியெழுப்பியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com