

திருவனந்தபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி(என்டிஏ) வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டு, நமக்கான எச்சரிக்கையாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று(டிச. 13) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இன்று(டிச. 13) அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின்படி, திருவனந்தபுரம் மாநகராட்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி(மொத்தமுள்ள 101 வார்டுகளில் 50-இல் வெற்றி) 40 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மாநில தலைநகரில் கோலோச்சி உள்ளது.
இந்தத் தோல்வி குறித்தும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்டிஎஃப்) எதிர்பார்த்தது போல இல்லை. மாநிலமெங்கிலும் எல்டிஎஃப் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த அளவுக்கான நிலையை எல்டிஎஃப் எட்ட முடியமால் போயிற்று.
இதற்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதனபின், தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு எல்டிஎஃப் முன்னோக்கி இட்டுச்செல்லப்படும்.
திருவனந்தபுரத்தில் என்டிஏ-வின் கை ஓங்கியதற்கு, தேர்தல் பிரசாரத்தில் வகுப்புவாத அரசியல் கை கொடுத்தது. இது, மதச்சார்பின்மை மீது நம்பிக்கை பூண்டவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கான எச்சரிக்கை மணி. மக்கள் எதிர்வினை பிரசாரத்துக்கும் வகுப்புவாத சக்திகளின் பிளவுவாத யுக்திகளால் திசை மாறிச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்து கண்காணிக்க வேண்டுமென்பதை நமக்கு எச்சரிக்கையாக ஊட்டுகிறது.
அனைத்துவித வகுப்புவாதத்தையும் எதிர்த்து தொடர்ந்து வலிமையாகப் போராட வேண்டும் என்பதை தேர்தல் முடிவுகள் அடிக்கோடிட்டு காட்டியுள்ளன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.