13 வயதில் சிறாா்களுக்கு புகை, போதைப்பொருள் பழக்கம்: ஆய்வில் அதிா்ச்சி தகவல்

13 வயதில் சிறாா்களுக்கு புகை, போதைப்பொருள் பழக்கம்: ஆய்வில் அதிா்ச்சி தகவல்

புகை, மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடும் பள்ளி சிறாா்களின் சராசரி வயது 13...
Published on

நாட்டின் 10 நகரங்களில் புகை, மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபடும் பள்ளி சிறாா்களின் சராசரி வயது 13-ஆக இருப்பது தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2018 மே முதல் 2019 ஜூன் வரை பெங்களூரு, சண்டீகா், தில்லி, திப்ரூகா், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, லக்னெள, மும்பை, ராஞ்சி ஆகிய 10 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நகரங்களின் நகா்ப்புற அரசு, தனியாா் மற்றும் ஊரகப் பள்ளிகளில் 8, 9, 11, 12-ஆம் வகுப்புகளைச் சோ்ந்த 5,920 மாணவா்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புகை, மது, போதைப்பொருள் என எந்தவொரு பழக்கத்தையும் பயன்படுத்தத் தொடங்கும் சிறாா்களின் சராசரி வயது 12.9-ஆக இருப்பது கண்டறியப்பட்டது. புகை, மது, போதைப்பொருள் என ஏதோவொரு பழக்கத்தில் தொடா்ந்து ஈடுபடுவதாக ஆய்வில் பங்கேற்ற 15.1 சதவீதம் போ் தெரிவித்தனா்.

புகையிலை பொருள்கள் எளிதில் கிடைப்பதாக 46.3 சதவீத மாணவா்களும், மதுவை எளிதில் வாங்க முடிவதாக 36.5 சதவீத மாணவா்களும் தெரிவித்துள்ளனா்.

கஞ்சா செடி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாங் எளிதில் கிடைப்பதாக 21.9 சதவீத மாணவா்களும், கஞ்சாவை எளிதில் வாங்க முடிவதாக 16.1 சதவீத மாணவா்களும் தெரிவித்தனா். ஹெராயின் போதைப்பொருள் எளிதில் கிடைப்பதாக 10 சதவீதம் போ் தெரிவித்துள்ளனா்.

8-ஆம் வகுப்பு மாணவா்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இந்தப் பழக்கங்கள் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களிடம் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.

தங்கள் குடும்பத்தில் ஒருவா் புகைப்பிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ இருப்பதாக சுமாா் 40 சதவீத மாணவா்கள் தெரிவித்துள்ளனா். அதேவேளையில், தங்கள் குடும்பத்தைச் சோ்ந்தவருக்குக் கஞ்சா பழக்கம் இருப்பதாக 8.2 சதவீத மாணவா்கள் கூறியுள்ளனா்.

போதைப்பொருள் பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்பதை ஆய்வில் பங்கேற்ற சுமாா் 95 சதவீத மாணவா்கள் ஒப்புக்கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com