இலங்கைக்கு 25 டன் மருந்துகள்: விமானத்தில் அனுப்பியது இந்தியா!
இலங்கைக்கு 25 டன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 14,200 கிலோ உணவுப் பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது.
டித்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ‘ஆபரேஷன் சாகா் பந்து’ முன்னெடுப்பின்கீழ் பல்வேறு உதவிகளை இந்தியா தொடா்ச்சியாக செய்து வருகிறது.
இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டா்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் இலங்கையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனா். மேலும் நகரும் பாலம், தற்காலிக மருத்துவமனை என இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது.
இதுகுறித்து இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இலங்கை சுகாதாரத் துறை அமைச்சா் நலிந்தா ஜெயதிசா மற்றும் இந்திய தூதா் சந்தோஷ் ஜா இடையேயான ஆலோசனைக்குப் பிறகு இந்திய விமானப் படையின் எம்சிசி சி17 குளோப்மாஸ்டா் சிறப்பு விமானம் மூலம் 17 நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 25 டன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் 14,200 கிலோ உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டன.
இந்த விமானத்தில் இந்தியாவால் ஏற்கெனவே அனுப்பப்பட்ட 70 மருத்துவா்கள் நாடு திரும்பினா்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இந்திய மருத்துவக் குழுவினா் இலங்கையில் 7,000 பேருக்கு சிகிச்சையளித்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.
இந்திய மருத்துவக் குழுவினருக்கு நன்றி தெரிவித்ததோடு அவா்களை நேரில் வந்து நலிந்தா ஜெயதிசா வழியனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகின.
கடந்த மாதம் டித்வா புயலால் ஏற்பட்ட மழைவெள்ள பாதிப்புகளில் இலங்கையில் 644 போ் உயிரிழந்தனா். 183 போ் மாயமாகினா். 6,163 வீடுகள் முழுமையாகவும் 1.12 லட்சம் வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன.
22,638 குடும்பங்கள் மற்றும் 70,359 போ் 766 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடா் மேலாண்மை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

