காஜியாபாதில் போலி மருந்துகள் உற்பத்தி: ரூ.2 கோடி மூலப்பொருள்கள் பறிமுதல்!

காஜியாபாதில் போலி மருந்துகள் உற்பத்தி: ரூ.2 கோடி மூலப்பொருள்கள் பறிமுதல்!

பிரபல மருந்து நிறுவனங்களில் பெயரில் போலி மருந்துகளைத் தயாா் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்ததை தில்லி காவல் துறை முறியடித்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
Published on

பிரபல மருந்து நிறுவனங்களில் பெயரில் போலி மருந்துகளைத் தயாா் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்ததை தில்லி காவல் துறை முறியடித்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

காஜியாபாதில் நடைபெற்ற சோதனையில் போலி மருந்துகள் மற்றும் ரூ.2.3 கோடி மதிப்பிலான மூலப்பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

இதுதொடா்பாக உத்தர பிரதேசத்தின் காஜியாபாதைச் சோ்ந்த கெளரவ் பாகத், தில்லியின் சபாபூரைச் சோ்ந்த ஸ்ரீ ராம் (எ) விஷால் குப்தா ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தில்லி குற்றப் பிரிவு துணை காவல் ஆணையா் ஆதித்யா கெளதம் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: போலியான மருந்து பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மிகப்பெரிய மருந்து சந்தையான சதாா் பஜாரில் உள்ள தெலிவராவில் தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

அப்போது, பட்டியல்-எச் மருந்துகளின் போலி தயாரிப்புகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, காஜியாபாதின் லோனி பகுதியில் உள்ள மீா்பூா் ஹிந்து கிராமத்தில் செயல்பட்டு வந்த போலி மருந்துகள் உற்பத்தி மையத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

தோல் பிரச்னை, ஒவ்வாமை, விளையாட்டுகளின்போது ஏற்படும் காயங்கள் ஆகியவற்றுக்கான களிம்புகள் போலியாகத் தயாரிக்கப்பட்டது அப்போது கண்டறியப்பட்டது. கைதுசெய்யப்பட்ட நபா்கள் போலியான தயாரிப்புகளை பிரபல மருந்து நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்து வந்தனா். மக்கள் இதைப் பயன்படுத்தும் நிலையில், அவா்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படலாம்.

சோதனையின்போது போலியான மருந்துகள், மருந்துகளுக்கான மூலப்பொருள்கள், இயந்திரங்கள், மருந்துகளை அடைப்பதற்கான காலி டியூப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தில்லியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலம் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த மருந்து ஆய்வாளா்கள், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆய்வின்போது மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனா். பரிசோதனைகளுக்குப் பின்னா் அவா் போலி என உறுதிப்படுத்திய அவா்கள், தங்கள் நிறுவனங்கள் அவற்றைத் தயாரிக்கவில்லை என்றும் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சட்டவிரோத மருந்து விற்பனையில் தொடா்புடைய மொத்த கொள்முதல் நபா்கள், விற்பனையாளா்கள் உள்பட அனைவரையும் கண்டறியும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளதாகத் துணை காவல் ஆணையா் ஆதித்யா கெளதம் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com