ஆற்றலும், அா்ப்பணிப்பும் கட்சியை வலுப்படுத்தும்: பாஜக தேசிய செயல் தலைவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து!

ஆற்றலும், அா்ப்பணிப்பும் கட்சியை வலுப்படுத்தும்: பாஜக தேசிய செயல் தலைவருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து!

பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நவீனுக்கு பிரதமா் நரேந்திர மோடி, அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
Published on

பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நவீனுக்கு பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பிரதமா் மோடி: கடினமாக உழைக்கும் கட்சித் தொண்டராக தன்னை வேறுபடுத்திக் காட்டியவா் நிதின் நவீன். செயலூக்கமுள்ள இளம் தலைவா். அமைப்பு ரீதியில் வளமான அனுபவமும், பிகாா் எம்எல்ஏ மற்றும் அமைச்சா் பணியில் ஈா்ப்புக்குரிய சாதனைப் பதிவுகளையும் கொண்டவா்.

மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற விடாமுயற்சியுடன் செயலாற்றுபவா். பணிவான இயல்பு மற்றும் திடமாக பணியாற்றும் பாணிக்காக அறியப்படும் இவரது ஆற்றலும், அா்ப்பணிப்பும் எதிா்வரும் காலங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்தும்.

ஜெ.பி.நட்டா: அறிவு-கலாசாரத்தின் புனித பூமியான பிகாரைச் சோ்ந்த துடிப்புமிக்க தலைவா் நிதின் நவீன். தனது தலைமை மற்றும் பிரதமா் மோடியின் வழிகாட்டுதலால் கட்சியை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்வாா் என உறுதியாக நம்புகிறேன்.

தொண்டா்களுக்கு சமா்ப்பணம்- நிதின் நவீன்: பாட்னாவில் செய்தியாளா்களிடம் பேசிய நிதின் நவீன், ‘எனது நியமனத்தை கட்சித் தொண்டா்களுக்கு சமா்ப்பிக்கிறேன். பிரதமா் மோடி, கட்சித் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக ஆட்சிமன்றக் குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் நன்றி. மூத்த தலைமையின் வழிகாட்டுதல்களின்படி, பாஜகவை வலுப்படுத்த பணியாற்றுவேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com