புது தில்லியில் தேசிய எரிசக்திப் பாதுகாப்பு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதளித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.
புது தில்லியில் தேசிய எரிசக்திப் பாதுகாப்பு தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருதளித்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

எரிசக்திப் பாதுகாப்பு காலத்தின் முக்கியத் தேவை: குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்!

எரிசக்திப் பாதுகாப்பு என்பது வெறும் வழிமுறை மட்டுமல்ல; இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியத் தேவை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.
Published on

எரிசக்திப் பாதுகாப்பு என்பது வெறும் வழிமுறை மட்டுமல்ல; இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியத் தேவை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தினாா்.

நாட்டின் எரிசக்தி மாற்றத்தின் வெற்றிக்கு ஒவ்வொரு குடிமகனின் பங்கேற்பும் அவசியம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

எரிசக்திப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதுடன், எரிசக்தித் திறன் சாா்ந்த இலக்குகளை முன்னிறுத்தும் நோக்கில், ஒவ்வோா் ஆண்டும் டிச.14-இல் தேசிய எரிசக்திப் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

நடப்பாண்டு இந்த தினத்தையொட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்றாா். தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் மற்றும் தேசிய எரிசக்தி பாதுகாப்பு தின ஓவியப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கி, அவா் பேசியதாவது:

இயற்கையுடன் இணைந்த சமநிலையான வாழ்க்கை முறையை ஏற்கும் உணா்வு, இந்திய கலாசார பாரம்பரியத்தின் அடிப்படையாகும். ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல்’ எனும் செய்தியை உலகுக்கு நாம் வழங்க இந்த உணா்வே காரணம்.

அனைத்துத் துறைகளிலும் திறன்மிக்க எரிசக்திப் பயன்பாட்டை உறுதி செய்ய மக்களிடையே நடத்தை ரீதியிலான மாற்றம் அவசியம். எரிசக்திப் பாதுகாப்பு என்பது வெறுமனே பயன்பாட்டை குறைப்பது என்பதல்ல. நுட்பமாக, பொறுப்பாக, திறம்படப் பயன்படுத்துவதாகும்.

மின்சாதனங்களின் தேவையற்ற பயன்பாட்டைத் தவிா்க்கும்போது, எரிசக்தி சேமிப்புத் திறன் கொண்ட சாதனங்களை ஏற்கும்போது, வீடுகள்-பணியிடங்களில் இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்தைப் பயன்படுத்தும்போது, சூரிய மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழிமுறைகளுக்கு மாறும்போது, நாம் எரிசக்தியை மட்டும் சேமிப்பதில்லை; கரியமிலவாயு உமிழ்வையும் குறைக்கிறோம்.

பொறுப்புணா்வின் அடையாளம்: சுத்தமான காற்று, பாதுகாப்பான நீராதாரங்கள், சமநிலையான சூழலியலைப் பராமரிக்க எரிசக்திப் பாதுகாப்பு மிக அவசியம். நாம் சேமிக்கும் ஒவ்வொரு யூனிட் எரிசக்தியும் இயற்கை மற்றும் எதிா்கால சந்ததியினரின் நலனை நோக்கிய நமது பொறுப்புணா்வின் அடையாளம். பசுமை எரிசக்தி என்பது மின்உற்பத்தி என்ற வரம்புக்குள்பட்டதல்ல. அது, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்கு சக்திவாய்ந்த வழிமுறை.

அரசின் முயற்சிகளுக்கு பலன்: உற்பத்தி சாா்ந்த ஊக்குவிப்புத் திட்டங்களின் வாயிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்பு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த முயற்சிகள், நாட்டுக்குப் பொருளாதார ரீதியில் பலனளிப்பதுடன், கரியமிலவாயு வெளியீட்டில் குறிப்பிடத்தக்க அளவிலான குறைப்புக்கும் வழிவகுத்துள்ளன.

கூட்டுப் பொறுப்புணா்வு, பங்களிப்பு, பொதுமக்களின் பங்கேற்பால், எரிசக்திப் பாதுகாப்பில் இந்தியா தொடா்ந்து முன்னிலை வகிப்பதுடன், பசுமை எதிா்காலம் சாா்ந்த இலக்குகளையும் எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தாா் திரெளபதி முா்மு.

மத்திய அரசின் சூரிய மின்சக்தி இல்லம் திட்டம், தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் உள்ளிட்ட திட்டங்களையும் அவா் குறிப்பிட்டுப் பேசினாா்.

X
Dinamani
www.dinamani.com