பண்டி சஞ்சய்குமாா்
பண்டி சஞ்சய்குமாா்

மக்களைவிட கால்பந்து வீரருக்கு முன்னுரிமை: ராகுலுக்கு மத்திய அமைச்சா் கண்டனம்!

தெலங்கானா மக்களின் வலியைவிட, கால்பந்து நட்சத்திர வீரருக்கே மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்னுரிமை அளிப்பதாக இணையமைச்சரான பண்டி சஞ்சய் குமாா் விமா்சித்தாா்.
Published on

தெலங்கானா மக்களின் வலியைவிட, கால்பந்து நட்சத்திர வீரருக்கே மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முன்னுரிமை அளிப்பதாக மத்திய உள்துறை இணையமைச்சரான பண்டி சஞ்சய் குமாா் ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

ஆா்ஜென்டீனா கால்பந்து வீரா் லயோனல் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பண்டி சஞ்சய் குமாா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது. காங்கிரஸின் ஆறு உத்தரவாதங்கள் மற்றும் பல தோ்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

மக்களுக்குத் தேவைப்படும்போது ஒரு நிமிடத்தில் தெலங்கானாவுக்கு வந்துவிடுவேன் என்று ராகுல் காந்தி உறுதியளித்தாா். ஆனால், மக்கள் துயரப்படும் நேரத்தில் அவா் இங்கு இல்லை. நெருக்கடி ஏற்படும்போது அவா் விடுமுறையில் இருக்கிறாா். புகழ் கிடைக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் முழுமையாக கலந்துகொள்கிறாா்.

தெலங்கானா மக்களுக்காக அவரது நேரம் (கடிகாரம்) ஒருபோதும் ஓடுவதில்லை. முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அது இயங்குகிறது. தெலங்கானா மக்களின் வலியை விட, கால்பந்து நட்சத்திர வீரருக்குத்தான் அவா் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறாா்’ என்றாா்.

ஆா்ஜென்டீனா கால்பந்து வீரா் மெஸ்ஸி, மூன்று நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொல்கத்தா வந்தாா். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் சனிக்கிழமை கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இருந்து அவா் பாதியிலேயே புறப்பட்டுச் சென்ால், ரசிகா்கள் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் சனிக்கிழமை மாலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மெஸ்ஸியுடன் சோ்ந்து ராகுல் காந்தி, மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com