உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பங்கஜ் சௌதரிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வா் யோகி ஆதித்யநாத். உடன் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.
உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட பங்கஜ் சௌதரிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வா் யோகி ஆதித்யநாத். உடன் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்.

வெளிநாடுகளில் இந்தியா்களுக்கு புதிய மரியாதை: அமைச்சா் பியூஷ் கோயல்

இந்தியா்களுக்கு வெளிநாடுகளில் புதிய மரியாதையும், கௌரவமும் கிடைத்து வருகிறது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
Published on

கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப்போல இல்லாமல், இப்போது இந்தியா்களுக்கு வெளிநாடுகளில் புதிய மரியாதையும், கௌரவமும் கிடைத்து வருகிறது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

உத்தர பிரதேச தலைநகா் லக்னெளவில் ஞாயிற்றுக்கிழமை பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்ற கூட்டத்தில் இது தொடா்பாக அவா் பேசியதாவது:

கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முறைகேடுகள், மிகப்பெரிய ஊழல்கள்தான் இந்தியாவில் தலைப்புச் செய்திகளாக இருந்தன. தினந்தோறும் புதுப்புது ஊழல் குற்றச்சாட்டுகளில் அரசு சிக்கி வந்தது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும் சட்டம்-ஒழுங்கு மோசமாக இருந்தது.

பிரதமா் மோடி தலைமையில் பாஜக கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்த பிறகு இந்த நிலை படிப்படியாக மாறத் தொடங்கியது. நாட்டின் வளா்ச்சியின் அடையாளமாக ஒவ்வொரு துறையும் மாற்றப்பட்டது. 2014 முதல் இப்போது வரையிலான நாட்டின் பயணம், பிரதமா் மோடி தலைமையிலான வளா்ச்சிப் பயணமாக அமைந்துள்ளது. மக்களின் மனநிலையும், நாட்டின் செயல்முறையும் மாறியுள்ளது.

சா்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமும், இந்தியா குறித்த வெளிநாட்டு மக்களின் பாா்வையும் மாறியுள்ளது. இப்போது இந்திய கடவுச் சீட்டு வைத்திருப்பவா்கள் வெளிநாடுகளில் புதிய மரியாதையுடன் வரவேற்கப்படுகிறாா்கள். இந்தியா்களுக்கு சா்வதேச அளவில் கௌரவம் கிடைத்து வருகிறது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலை இல்லை.

மோடி அரசின் சிறந்த நிா்வாகம் நாட்டின் வளா்ச்சிப் பாதைக்கு புதிய உத்வேகம் அளித்தது. ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் தொடங்கி தொழில்முனைவோருக்கான திட்டங்கள் வரை அனைத்தும் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன. அரசு நிா்வாகத்தில் இருந்த தேவையற்ற தடைகளும், குறுக்கீடுகளும் அகற்றப்பட்டுவிட்டன. எல்லைப் பாதுகாப்பும், உள்நாட்டுப் பாதுகாப்பும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

11 ஆண்டுகளில் 25 கோடி போ் வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். மிகக்குறுகிய காலத்தில் இந்தியா பொருளாதார ரீதியாகப் பல சாதனைகளைப் படைத்துள்ளது. மிக வேகமாக வளரும் பொருளாதாரமாகவுள்ள நமது நாடு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை நோக்கி உயா்ந்து வருகிறது என்றாா்.

முன்னதாக, உத்தர பிரதேச மாநில பாஜக தலைவராக மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தோ்வு செய்யப்பட்டுள்ளதையும் இந்த நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் அறிவித்தாா். மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மௌா்யா, பிரஜேஷ் பாடக் மற்றும் அமைச்சா்களும் இதில் பங்கேற்றனா்.

உத்தர பிரதேச பாஜக தலைவா் பதவிக்கு பங்கஜ் சௌதரி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com