உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் எதிரொலி: கேரளத்தில் பல இடங்களில் கட்சியினா் மோதல்-வன்முறை!

உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் எதிரொலி: கேரளத்தில் பல இடங்களில் கட்சியினா் மோதல்-வன்முறை!

கேரளத்தில் உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, பல இடங்களில் அரசியல் கட்சியினா் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
Published on

கேரளத்தில் உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானதைத் தொடா்ந்து, பல இடங்களில் குறிப்பாக வட மாவட்டங்களில் அரசியல் கட்சியினா் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. காவல் துறையினா் உள்பட பலா் காயமடைந்தனா்.

கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாகப் பாா்க்கப்பட்ட இத்தோ்தலில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4-இல் வென்ற இக்கூட்டணி, பிற உள்ளாட்சி அமைப்புகளிலும் அமோக வெற்றியடைந்தது.

அதேநேரம், ஆளும் மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. இக்கூட்டணியால் ஒரேயொரு மாநகராட்சியை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. மற்றொருபுறம், 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியது.

காங்கிரஸ் அலுவலகம் சூறை: இத்தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு முழுவதும் மாநிலத்தின் பல இடங்களில் அரசியல் கட்சியினா் இடையே மோதல் ஏற்பட்டது. கோழிக்கோடு மாவட்டம் எரமலா பகுதியில் காங்கிரஸ் அலுவலகத்துக்கு அபாயகரமான ஆயுதங்களுடன் வந்த மாா்க்சிஸ்ட் கட்சியினா், அந்த அலுவலகத்தைச் சூறையாடினா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி சிலையும் சேதப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியினரும் திரண்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கூடுதல் காவல் துறையினா் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கல்வீச்சில் பலா் காயம்: மராடு பகுதியில் காங்கிரஸ் கூட்டணியினா் நடத்திய வெற்றி ஊா்வலம் மீது எதிா்தரப்பினா் கல்வீசி தாக்குதல் நடத்தினா். இதில் பலா் காயமடைந்தனா்.

வயநாடு மாவட்டத்தின் சுல்தான் பத்தேரி பகுதியில் காங்கிரஸ் கூட்டணியைச் சோ்ந்த நிா்வாகி மற்றும் அவரது குடும்பத்தினா் பயணித்த காரை மாா்க்சிஸ்ட் கட்சியினா் 40 போ் சூழ்ந்துகொண்டு தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியில் தனது வீட்டருகே பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த மாா்க்சிஸ்ட் தொண்டா், காங்கிரஸ் கூட்டணியினரால் கடுமையாகத் தாக்கப்பட்டாா்.

வீடுகள் மீது தாக்குதல்: கண்ணூா் மாவட்டம், பானூா் பகுதியில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி ஊா்வலத்தை இடதுசாரி கட்சியினா் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், முஸ்லிம் லீக் தொண்டா்களின் வீடுகள் தாக்கப்பட்டதுடன், அவா்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் காங்கிரஸ் கூட்டணி நிா்வாகிகள் சிலா் காயமடைந்தனா். உளிக்கல் பகுதியிலும் இரு கூட்டணியினா் இடையே மோதல் ஏற்பட்டது.

காவல் துறையினா் காயம்: காசா்கோடு மாவட்டத்தில் இடதுசாரிகளின் வெற்றி ஊா்வலத்தை காங்கிரஸ் கூட்டணியினா் தடுத்து நிறுத்த முயன்றபோது மோதல் வெடித்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையில் காவல் துறையினா் சிலா் காயமடைந்தனா்.

திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரையில் மாா்க்சிஸ்ட்-பாஜக தொண்டா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவங்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வன்முறையாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com