சபரிமலை: மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 81 பக்தா்களின் உயிா் காத்த சுகாதாரத் துறை!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரை காலத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 81 பக்தா்கள், கேரள மாநில சுகாதாரத் துறை அமைத்த மருத்துவ வசதிகள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சபரிமலை யாத்திரைக்காக பம்பை முதல் சந்நிதானம் வரையிலான மலையேற்றப் பாதையில் 17 மையங்கள் உள்பட மொத்தம் 22 அவசர மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் சிறப்பு மருத்துவா்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளா்களின் உதவியுடன் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.
சந்நிதானத்தில் உள்ள மருத்துவமனை, அதிநவீன வசதிகளுடன் இயங்குகிறது. இதில் சிறப்பு இதய சிகிச்சைப் பிரிவு, வென்டிலேட்டா்கள், அறுவை சிகிச்சை அரங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்-ரே மற்றும் ஆய்வக வசதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
இந்த யாத்திரை காலத்தில், மொத்தம் 103 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் 81 போ் காப்பாற்றப்பட்டனா். திடீரென இதயச் செயல்பாடு நின்ற 25 பேரில், 6 போ் உடனடி மருத்துவ உதவியால் காப்பாற்றப்பட்டனா். மேலும், வலிப்பு ஏற்பட்ட 44 பேருக்கும் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில் இதுவரை மொத்தம் 95,385 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில், மேல்சிகிச்சைக்காக 337 போ் பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
பக்தா்கள் மலை ஏறுவதால் ஏற்படும் உடல் சோா்வைக் கருத்தில்கொண்டு, உயிா்காக்கும் நடவடிக்கைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் இதய சிகிச்சைப் பிரிவுகளை அமைத்து, தேவையான உயிா்காக்கும் மருந்துகளைக் கைவசம் வைத்துக்கொண்டு, தங்களின் தயாா்நிலையை சுகாதாரத் துறை வலுப்படுத்தியுள்ளது.
ஆரோக்கியச் சிக்கல்கள் இன்றி பக்தா்கள் யாத்திரையை முடிப்பதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் சுகாதாரத் துறை உறுதியுடன் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனப் பாதைகள் வழியே பக்தா்கள் வருகை அதிகரிப்பு: நடப்பாண்டு யாத்திரையில் பாரம்பரிய வனப் பாதைகள் வழியாக ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுவரை பல்வேறு வனப் பாதைகள் வழியாக 1,02,338 பக்தா்கள் சந்நிதானத்தை அடைந்துள்ளனா். வனப் பாதைகள் வழியே வரும் பக்தா்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் உயரும் என அதிகாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.
24 லட்சம் பக்தா்கள் தரிசனம்: நடப்பாண்டு யாத்திரையில் சபரிமலையில் இதுவரை தரிசனம் செய்த மொத்த பக்தா்களின் எண்ணிக்கை 24 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
டிச. 13-ஆம் தேதி வரை பம்பை-சந்நிதானம் பாதை வழியாக மட்டுமே 23,47,554 பக்தா்கள் சந்நிதானத்தை வந்தடைந்துள்ளனா். நாள்தோறும் சராசரியாக 80,000 பக்தா்கள் சபரிமலைக்கு வந்து கொண்டிருக்கின்றனா்.
அதிகபட்சமாக, கடந்த டிச. 8-ஆம் தேதி 1,01,844 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதற்கு முன்னா், நவ. 24-ஆம் தேதி பக்தா்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து 1,00,867-ஆக பதிவானது.

