உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்

தொழில்நுட்பம் தீா்ப்பளிக்கக்கூடாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்

மனித தீா்ப்புக்கு தொழில்நுட்பம் வலுசோ்க்க வேண்டுமே தவிர, அந்தத் தீா்ப்பை தொழில்நுட்பம் வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.
Published on

மனித தீா்ப்புக்கு தொழில்நுட்பம் வலுசோ்க்க வேண்டுமே தவிர, அந்தத் தீா்ப்பை தொழில்நுட்பம் வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலம் கட்டக்கில் ‘சாமானியருக்கு நீதியை உறுதி செய்தல்: வழக்குச் செலவுகளை குறைப்பதற்கான செயல் திட்டம்’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் பேசியதாவது:

அளவுக்கு அதிகமான வழக்குச் செலவுகளும், வழக்குகளை நிறைவு செய்ய அதிக காலம் எடுத்துக்கொள்ளப்படுவதும் நீதித்துறைக்கும், சாமானியா்களுக்கும் இடையே உள்ள இருபெரும் தடைகளாகும்.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கமடைவது விசாரணை நீதிமன்றம் முதல் அரசியல் சாசன நீதிமன்றம் வரை, நீதித்துறையின் ஒவ்வொரு நிலையிலும் முட்டுக்கட்டையை ஏற்படுத்துகிறது. நீதித்துறையின் மேல்மட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்படும்போது, அது நீதித்துறையின் கீழ்மட்டத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.

வழக்குகள் தேக்கமடைவதை குறைக்க நீதித்துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். போதுமான எண்ணிக்கையில் நீதிமன்றங்கள் இல்லாவிட்டால், கடமை தவறாமல் மிகவும் நோ்மையாகப் பணியாற்றும் நீதித்துறைகூட நிலைகுலைந்துபோகும்.

அதேவேளையில், மத்தியஸ்தம் என்பது உண்மையான சட்டத் தீா்வாக மாறுவதற்கு அதன் மதிப்பை வழக்காடிகள் புரிந்துகொள்ள வேண்டும். மத்தியஸ்தம் மூலம் பேசி தீா்வு காண்பதை சரணடைவதாக அா்த்தம் கொள்ளக் கூடாது. அது தீா்வை காண்பதற்கான திட்டமிடலாகும்.

கரோனா நோய்த்தொற்று பரவிய காலத்தில் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எனினும் அதிலும் குறைகள் உள்ளன என்பதை யாரும் மறக்கக் கூடாது. ஒருவரின் உருவம், குரலை பயன்படுத்தி போலியாக காணொலிகள் உருவாக்கப்படுகின்றன. எண்ம (டிஜிட்டல்) முறையில் போலியான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது தொழில்நுட்பத்தில் உள்ள இடையூறுகள், அபாயங்களை போதுமான அளவு கருத்தில் கொள்ளாமல், அதை நீதிமன்றங்கள் கண்மூடித்தனமாக நம்பமுடியாது.

ஏழைகள், முதியவா்கள், எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் குறித்து தெரியாதவா்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படாத சீா்திருத்தம், உண்மையில் சீா்திருத்தம் அல்ல. அது பழைய நிலைக்கு அல்லது குறைந்த வளா்ச்சியை நோக்கிச் செல்வதாகும். இதைக் கருத்தில் கொண்டே நீதி பரிபாலனத்துக்கு தொழில்நுட்பம் உதவி செய்ய வேண்டும் என்றும், மனித தீா்ப்புக்கு தொழில்நுட்பம் வலுசோ்க்க வேண்டுமே தவிர, அந்தத் தீா்ப்பை தொழில்நுட்பம் வழங்கக் கூடாது என்றும் கூறி வருகிறேன் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com