

உத்தரகண்ட்டில் இமயமலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்காக விரைவில் பனிச் சுற்றுலா திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ‘பனிச் சிறுத்தை சுற்றுலா’ என்ற பெயரில் சோதனை முறையில் அறிமுகமாகவுள்ள இத்திட்டத்தில், இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள கங்கோத்ரி தேசிய பூங்காவானது சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும். பனிக்காலத்தில் சுற்றுலாவை ஈர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், அப்பகுதிகளில் சாகச விளையாட்டுகள், தங்குமிடங்கள், உள்ளூர் வழிகாட்டிகள் மற்றும் பிற செயல்பாடுகள் ஆகியவை இத்திட்டத்தால் பலனடையும். இதனால் பொருளாதாரம் மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கையிங், ட்ரெக்கிங், பாராக்ளைடிங், ராப்பெல்லிங் உள்ளிட்ட சாகச விளையாட்டுகள் ஆலி, காலியா டாப், பெட்நிதார் ஆகிய பகுதிகளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இவற்றை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதனிடையே, ரிஷிகேஷில் சர்வதேச யோகா விழாவும், முசோரி, நைநிடால், உத்தரகாசியில் குளிர்காலத் திருவிழாக்களும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்கால சுற்றுலா திட்டம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர், இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ள பனிச் சிறுத்தை பார்வையிடுதல், ஹெலிகாப்டர் ஸ்கையிங் சாகசம், இமயமலை கார் ஊர்வலம் ஆகியவற்றை உடனடியாக தொடங்கிட அறிவுறுத்தியுள்ளார். மேலும், பைதானி, பௌரியில் அமைந்துள்ள ராகு கோவில் புனரமைப்பு மற்றும் அலங்கரித்தல் பணிகளையும் விரைவில் தொடங்கிடவும் அவர் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.