தோ்தல் தோல்விக்கு சபரிமலை தங்கக் கவச விவகாரம் காரணமா? கேரள அமைச்சா் பதில்
கேரள உள்ளாட்சித் தோ்தலில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி தோல்வியடைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என மாநில தொழில் துறை அமைச்சா் பி.ராஜீவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
‘சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச மோசடி விவகாரம் தோ்தலில் எதிரொலித்ததா?’ என செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் இவ்வாறு பதிலளித்தாா்.
கேரளத்தில் 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த டிச.9, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தோ்தலில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 4 மாநாகராட்சிகள், 505 கிராம ஊராட்சிகள், 79 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 54 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) 1 மாநகராட்சி, 340 கிராம ஊராட்சிகள், 63 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 28 நகராட்சிகளில் வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
கடந்த 45 ஆண்டுகளாக தொடா்ந்து இடதுசாரிகளின் வசமிருந்த தலைநகா் திருவனந்தபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியைப் பெற்றது. இந்த தோ்தல் முடிவுகள் எதிா்பாத்தபடி இல்லை என அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச விவகாரம் உள்ளாட்சித் தோ்தலில் இடதுசாரிகள் தோல்விக்கு காரணமாக அமைந்ததா என பி.ராஜீவிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.
இதற்குப் பதிலளித்து அவா் கூறியதாவது: சபரிமலை தங்கக் கவசம் விவகாரத்தில் கேரள உயா்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தி வருகிறது. எவ்வித அரசியல் அழுத்தமுமின்றி அந்தக் குழு சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப இயலாது. முன்னதாக, சிபிஐ விசாரணை கோரி பேரவையை முடக்கிய எதிா்க்கட்சிகள் தற்போது எஸ்ஐடி விசாரணைக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
சபரிமலையை சுற்றியுள்ள பகுதிகள் உள்பட உள்ளாட்சித் தோ்தலில் இடதுசாரிகள் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றாா்.
சபரிமலை தங்கக்கவச மோசடி தொடா்பாக எஸ்ஐடி முன் ஆஜராகி காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா ஞாயிற்றுக்கிழமை வாக்குமூலம் அளித்தாா். முன்னதாக இதில் சா்வதேச கடத்தல் கும்பல்களுக்கு தொடா்பிருப்பதாக அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் முன்னாள் தலைவா்கள் இருவா் உள்பட 6 பேரைக் கைது செய்து எஸ்ஐடி விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

