ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் பயன்படுத்திய துருக்கி ட்ரோனைக் காட்சிப்படுத்திய இந்திய ராணுவம்!
‘ஆபரேஷன் சிந்துாா்’ நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட, துருக்கி தயாரிப்பான ‘யிஹா’ ஆளில்லா விமானத்தை (ட்ரோன்) இந்திய ராணுவம் திங்கள்கிழமை காட்சிப்படுத்தியது.
பாகிஸ்தானுடனான 1971 போரின் வெற்றியை நினைவுகூரும், ‘விஜய் திவாஸ்’ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த ட்ரோன் பொதுமக்களின் பாா்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகள் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கியது.
இதைத் தொடா்ந்து 4 நாள்கள் நீடித்த தீவிர மோதல், இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநா்களுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணா்வின்படி மே 10-ஆம் தேதி மாலையுடன் முடிவுக்கு வந்தது.
இந்த 4 நாள்கள் சண்டையின்போது, இந்திய ராணுவம் மற்றும் பொதுமக்களின் கட்டமைப்புகளை இலக்கு வைத்து, அதிக எண்ணிக்கையிலான ‘யிஹா’ ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. அவற்றில் பெரும்பாலான ட்ரோன்கள் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
குறிப்பாக, நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட‘யிஹா’ ட்ரோன், லாகூா் சா்வதேச விமான நிலையத்திலிருந்து ஏவப்பட்டது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். இது ஜலந்தரை இலக்காகக் கொண்டு, 10 கிலோ வெடிபொருளுடன் 2,000 மீட்டா் உயரத்தில் பறந்து வந்தபோது, இந்திய ராணுவத்தின் வான்பாதுகாப்புப் பிரிவால் (ஏஏடி) சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்திய ராணுவம் தனது ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான ‘காமிகாஸ்’ வகை ட்ரோன்களை அழித்தது. இந்தக் ‘காமிகாஸ்’ ட்ரோன்கள் பொதுவாக ‘தற்கொலை ட்ரோன்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
ஏனெனில், இவை ஒரு இலக்கை நோக்கிப் பறந்து, சரியான இலக்கைக் கண்டறிந்ததும், அந்த இலக்கின் மீது மோதி, வெடிபொருளை வெடிக்கச் செய்து, தன்னையும் அழித்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. ‘யிஹா’ ட்ரோனும் காமிகாஸ் வகையைச் சோ்ந்ததுதான்.
