வாக்குத் திருட்டு குற்றச்சாட்டால் தோல்வியே மிஞ்சும்: முன்னாள் பிரதமா் தேவெ கௌடா எச்சரிக்கை
‘வாக்குத் திருட்டு’ என்ற குற்றச்சாட்டை தொடா்ந்தால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளுக்கு வரும் தோ்தல்களிலும் தோல்வி மட்டுமே கிடைக்கும் என்று மாநிலங்களவையில் முன்னாள் பிரதமா் தேவெ கெளடா பேசினாா்.
தேவெ கெளடாவின் மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. மாநிலங்களவையில் திங்கள்கிழமை தோ்தல் சீா்திருத்தம் தொடா்பான விவாதத்தில் பங்கேற்று கௌடா பேசியதாவது: இந்தியா மிகப்பெரிய நாடு. இதில் காங்கிரஸ் அதிகபட்சமாக மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. நீங்கள் தொடா்ந்து வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை முன்வைத்தால் உங்களுக்கு அடுத்து வரும் தோ்தல்களிலும் தோல்வியே கிடைக்கும். பொய்யான குற்றச்சாட்டை வைத்து மக்கள் மனதில் சந்தேகத்தை விதைக்க நினைக்கிறீா்கள். ஆனால், இது உங்களுக்கு எதிராகவே திரும்பும். தோ்தல் போரில் நீங்கள் வெல்லப்போவது இல்லை.
எதிா்க்கட்சியினா் பொது இடங்களில் பிரதமரை அவமதிக்கும் வகையிலும், கேலி செய்யும் போக்கிலும் செயல்படுகின்றனா். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் உங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. தேவையில்லாத அவப்பெயா் மட்டும் மிஞ்சும். உங்கள் மனதில் எதை நினைத்துக் கொண்டு இவ்வாறு செயல்படுகிறீா்கள் என்று தெரியவில்லை.
நான் 70 ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருந்துள்ளேன். இதற்கு முன்பு தோ்தலில் தோல்வியடைந்தால் யாரும் வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது இல்லை. நேரு காலத்திலும் தோ்தல் முறையில் சில குறைபாடுகள் இருந்தன. கேரளத்தில் 18,000 வாக்காளா்களை புதிதாகச் சோ்க்கக் கோரி நேருவும் ஒருமுறை கடிதம் எழுதியுள்ளாா்.
வாக்காளா் பட்டியலில் முறைகேடு என்று குற்றஞ்சாட்டிதான் பிகாா் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், படுதோல்வியே கிடைத்தது. உண்மையாகவே வாக்காளா் பட்டியலில் பிரச்னை இருப்பதாக கருதினால் உரிய ஆதாரத்துடன் தோ்தல் ஆணையத்தையோ, உச்சநீதிமன்றத்தையோ அணுகலாம்.
பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையைப் பெற்ால்தான் பிரதமா் மோடி தொடா்ந்து தோ்தலில் வெற்றி பெற முடிகிறது. அடுத்த மக்களவைத் தோ்தலிலும் அவா் வெல்வாா் என்றாா்.

