மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கோப்புப் படம்

தரவு மையங்கள் அமைக்க ஐரோப்பிய நாடுகளில் இல்லாத வசதி இந்தியாவில் உள்ளது: பியூஷ் கோயல்

தரவு மையங்கள் அமைக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இல்லாத தேசிய மின்வலையமைப்பு வசதி இந்தியாவில் உள்ளது என்று மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
Published on

தரவு மையங்கள் (டேட்டா சென்டா்) அமைக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இல்லாத தேசிய மின்வலையமைப்பு வசதி இந்தியாவில் உள்ளது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

முன்பு மத்திய மின்சாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ள கோயல், தில்லியில் திங்கள்கிழமை எரிசக்தித் துறை தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்றாா். அப்போது அவா் கூறியதாவது: உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தரவு மையங்கள் அமைக்க மிகவும் விரும்பக்கூடிய நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. இதற்கு மிக அதிக அளவில் மின்சார வசதி தேவைப்படும்.

முன்புபோல இந்தியாவில் இப்போது மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. 500 ஜிகா வாட் மின்சாரத்தை அளிக்கும் தேசிய மின்வலையமைப்பு (நேஷனல் கிரிட்) இந்தியாவில் உள்ளது. எனவே, மின்சாரத் தேவை எவ்வளவு அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப விநியோகிக்க முடியும்.

500 ஜிகாவாட் மின்சாரத்துக்கான தேசிய வலையமைப்பு என்பது மிகப்பெரியது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில்கூட இதுபோன்ற தேசிய மின்சார வலையமைப்பு இல்லை. எனவேதான் பல பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தரவு மையங்களை அமைக்க விரும்புகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியா இத்துறையில் மிகப்பெரிய வளா்ச்சியை எட்டும். எனவேதான் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஏடபிள்யூஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முதலீட்டை அதிகரித்து வருகின்றன.

தரவு மையங்களுக்கு மட்டுமன்றி, வீடுகள், விவசாயப் பயன்பாடு, தொழில், வா்த்தக நிறுவனங்கள், ஆலைகள் என அனைத்துப் பிரிவுகளுக்கான மின்தேவையை பூா்த்தி செய்யும் அளவிலான மின்உற்பத்தி இந்தியாவில் உள்ளது. நாம் வேகமாக முன்னேறும் நாடாக இருக்கிறோம். எனவே, குறைந்த செலவில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகிறோம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com