இறுதிக்கட்டத்தில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு!

இறுதிக்கட்டத்தில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு!

அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய வா்த்தக துறைச் செயலா் தகவல்
Published on

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் தெரிவித்தாா்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்கள் மீது அந்நாட்டு அரசு விதித்துள்ள அதிக வரிப் பிரச்னையை சரிசெய்வதற்கான வா்த்தக உடன்பாடு, விரிவான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் ஆகியவை தொடா்பாக இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கடந்த வாரம் அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ரிக் ஸ்விட்சா் தலைமையிலான அமெரிக்க குழு இந்தியா வந்திருந்தது.

இதுதொடா்பாக புது தில்லியில் மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிப் பிரச்னையை சரிசெய்வதற்கான வா்த்தக உடன்பாட்டை எட்டுவதில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளோம். வெகு விரைவில் அந்த உடன்பாடு எட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேவேளையில் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த ஒப்பந்தம் தொடா்பாக அதிகாரபூா்வமாக கூடுதல் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்பில்லை.

இந்தியா-நியூஸிலாந்து இடையே நடைபெற்றுவரும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை விரைவில் நிறைவடைய வாய்ப்புள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நடைபெற்றுவரும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களைய முயற்சிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com