ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

வாக்குத் திருட்டு என்ற பிரச்னை எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி மட்டும்தான்; இண்டி கூட்டணிக்கு இதில் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வர் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
Published on

வாக்குத் திருட்டு என்ற பிரச்னை எழுப்பியுள்ளது காங்கிரஸ் கட்சி மட்டும்தான்; எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கு இதில் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும், எதிா்க்கட்சி அணியில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டு, தோ்தல்களில் வெல்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. ‘வாக்குத் திருடா்களே, அரியணையைவிட்டு வெளியேறுங்கள்’ என்ற பிரதான முழக்கத்துடன் மத்திய அரசுக்கு எதிராக தில்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசையும், தோ்தல் ஆணையத்தையும் கடுமையாக விமா்சித்துப் பேசினா்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஒமா் அப்துல்லாவிடம் காங்கிரஸ் நடத்திய ஆா்ப்பாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘இதில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கு எந்தத் தொடா்பும் இல்லை. கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் கொள்கைகள், கோரிக்கைகள், குற்றச்சாட்டுகளை முன்வைக்க முழுஉரிமை உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி மட்டுமே வாக்குத் திருட்டு என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாகவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதில் எங்கள் கட்சி கருத்து கூறுவதற்கும், செய்வதற்கு ஏதுமில்லை’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com