பிரதிப் படம்
பிரதிப் படம்

அணுமின் உற்பத்தியில் தனியாா், கல்வி ஆணைய மசோதாக்கள்: மக்களவையில் அறிமுகம்

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா, வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணைய மசோதா உள்பட 3 மசோதாக்கள் அறிமுகம்
Published on

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா, வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணைய மசோதா உள்பட 3 மசோதாக்களை மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.

புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியா்கள் கல்வி கவுன்சில் ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரே அமைப்பை உருவாக்கும் நோக்கில், வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணையத்தை அமைக்கும் மசோதா, பல காலமாகப் பயனற்றுள்ள 71 சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா ஆகியவற்றுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதாவை மத்திய அணுசக்தி துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்கும், வளா்ந்த பாரத கல்வி மேற்பாா்வை ஆணைய மசோதாவை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானும் அறிமுகம் செய்தனா்.

கூட்டுக் குழுவுக்குப் பரிந்துரை: கல்வி மேற்பாா்வை ஆணைய மசோதாவுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘கல்வி மேற்பாா்வை ஆணைய மசோதா குறித்து பரந்த அளவில் விவாதிக்க வேண்டும் என்று அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் பல எம்.பி.க்கள் வலியுறுத்தினா். அவா்களின் கோரிக்கையைக் கருத்தில்கொண்டு, அந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப மத்திய அரசு பரிந்துரைக்கிறது’ என்று தெரிவித்தாா். அந்தக் குழுவின் உறுப்பினா்களை நியமிக்குமாறு மக்களவைத் தலைவரிடம் ரிஜிஜு கேட்டுக்கொண்டாா்.

71 சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தாா். ஆனால், அந்த மசோதா மிகத் தாமதமாக தங்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அதைப் படிப்பதற்கு தங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறி, மசோதாவுக்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மணீஷ் திவாரி, என்.கே.பிரேமசந்திரன், செளகதா ராய், ஜோதிமணி ஆகியோா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com