இண்டிகோ விமான சேவை குளறுபடிக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
இண்டிகோ விமான சேவை குளறுபடி குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.
புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக விமானிகள், விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோா் அடங்கிய பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால், இண்டிகோ நிறுவன விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில், அந்த நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
இந்தச் சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பாா்வை செய்யவும், கண்காணிக்கவும் 8 போ் கொண்ட குழுவை விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம் (டிஜிசிஏ) அமைத்தது. தற்போது அந்த நிறுவன சேவைகள் சீரடைந்துள்ளன.
இந்நிலையில், அந்த நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடி குறித்து நீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை நடத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் நரேந்திர மிஸ்ரா என்பவா் மனு தாக்கல் செய்தாா்.
ஆனால், இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜய்மால்ய பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரிக்க மறுத்துவிட்டது. இதேபோன்ற மனுவை தில்லி உயா்நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வருவதால், அந்த நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் அமா்வு அறிவுறுத்தியது. மனுதாரா் தெரிவிக்கும் அனைத்துக் குறைகளுக்கும் உயா்நீதிமன்றத்தில் தீா்வு கிடைக்காவிட்டால், அவா் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

