ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஆண்டு முழுவதுக்குமான நடவடிக்கை தேவை: காங்கிரஸ்

காற்று மாசைக் கட்டுப்படுத்த குளிா்காலங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுமைக்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிக்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Published on

காற்று மாசைக் கட்டுப்படுத்த குளிா்காலங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுமைக்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிக்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை முழுவதும் தில்லியை பனிப்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதனால், காற்றின் தரம் 498 புள்ளிகள் என கடுமை பிரிவில் பதிவானது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது: காற்று மாசினால் உயிரிழப்புகள் ஏற்படுவதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு தரவும் இல்லை என மத்திய அரசு கடந்த டிச.9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்திருந்தது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை 29-ஆம் தேதியும் மாநிலங்களவையில் இதே பதிலை மத்திய அரசு அளித்திருந்தது.

‘தி லான்செட்’ இதழிலில் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 7.2 சதவீத உயிரிழப்புகளுக்கு--ஆண்டுக்கு 10 நகரங்களில் 34,000 உயிரிழப்புகள்--காற்று மாசுடன் தொடா்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள சா்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் தேசிய சராசரி காற்று தர நிலைகளைக் (என்ஏஏக்யூஎஸ்) கடந்து காற்றின் தரம் பதிவான மாவட்டங்களில் பெரியவா்கள் முன்கூட்டியே உயிரிழப்பது 13 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் குழந்தைகளில் இது 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய குடும்ப மற்றும் மருத்துவ ஆய்வு (என்எஃப்எச்எஸ்)- 4 தரவைப் பயன்படுத்தி அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதால் இந்தியாவில் ஒவ்வொா் ஆண்டும் 15 லட்சம் கூடுதலாக உயிரிழப்புகள் ஏற்படுவதாக தி லான்செட் பிளானிடரி ஹெல்த் இதழில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளில் சுமாா் 70 சதவீத உயிரிழப்பு காற்று மாசால் ஏற்படுகிறது.

தேசிய சராசரி காற்று தர நிலைகள் (என்ஏஏக்யுஎஸ்) கடந்த 2009 நவம்பரில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அமல்படுத்தப்பட்டன. ஆனால், தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு அவற்றைப் புதுப்பித்து தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.

தேசிய தூய்மை காற்று திட்டம் கடந்த 2017-இல் தொடங்கப்பட்டாலும் பிஎம் 2.5 நுண் மாசுத் துகளின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை நுண் மாசுத் துகளின் அளவுகள் கடந்துள்ளன. அந்தத் திட்டத்தை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும்.

காற்று மாசு கட்டுப்பாட்டு திட்டம் (கிரேப்) தூய்மையான காற்றை மையமாகக் கொண்டு இருக்க முடியாது. அவை பிரச்னையை மேலாண்மை செய்பவை தவிர பிரச்னையைத் தவிா்க்கும் வகையில் இல்லை.

குளிா்காலங்களான அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் பல துறைகள் சாா்ந்த நடவடிக்கையை பெரிய அளவிலும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிவிக்கையில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com