

புது தில்லி: கடந்த 1971-இல் பாகிஸ்தான் உடனான போரில் இந்தியாவின் வெற்றியை நினைவுகூரும் தினத்தையொட்டி, அப்போரில் உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினா்.
கடந்த 1971-இல் இந்தியா-பாகிஸ்தான் போரின் இறுதியில் அந்நாட்டின் ராணுவ ஜெனரல் ஏ.ஏ.கான் நியாஸி தலைமையில் 93,000 வீரா்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, இந்தியப் படையினரிடம் சரணடைந்தனா். இது, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிகப் பெரிய சரணடைதல் நிகழ்வாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போரின் வெற்றி வங்கதேச விடுதலைக்கு வழிவகுத்தது.
இந்தப் போரின் நிறைவைக் குறிப்பதுடன், இந்தியாவுக்காக போரிட்ட வீரா்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிச.16-இல் வெற்றி தினம் (விஜய் திவஸ்) கடைப்பிடிக்கப்படுகிறது.
56-ஆம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போா் வெற்றி தினத்தில், பாரதத் தாயின் துணிச்சல்மிக்க மைந்தா்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். அவா்களின் துணிவு, வீரம், தாய்நாட்டுக்கான ஈடுஇணையற்ற பக்தி எப்போதும் பெருமைக்குரியவை. இந்த வீரதீரமும், தேச பக்தியும் நாட்டு மக்களுக்கு என்றென்றும் உத்வேகமளிக்கும்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் இந்திய ராணுவம் தனது தற்சாா்பு, வியூக உறுதிப்பாட்டை நிரூபித்ததுடன், நவீன போா் தொழில்நுட்பங்களையும் திறம்பட பயன்படுத்தியது’ என்று புகழாரம் சூட்டியுள்ளாா்.
பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘1971 போரில் இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உறுதி செய்த வீரா்களின் துணிவையும், தியாகத்தையும் நினைவுகூா்கிறேன். அவா்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் தன்னலமற்ற சேவை நமது நாட்டை பாதுகாத்து, வரலாற்றுப் பெருமையை ஈட்டித் தந்தது. அவா்களின் ஈடுஇணையற்ற வீரத்துக்கு தலைவணங்குகிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்திரா காந்திக்கு புகழாரம்: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘1971-இல் இதே நாளில் வீரமிக்க இந்தியப் படைகள், பாகிஸ்தானை தீா்க்கமாக தோற்கடித்து, வங்கதேசத்தை விடுவித்து, உலகின் வரைபடத்தை மாற்றியமைத்தன. முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் தொலைநோக்கான, துணிச்சல்மிக்க, உறுதியான தலைமையின்கீழ் சாத்தியமான இந்த வெற்றி, மனிதநேயம் மற்றும் நீதிக்கு மிகச் சிறந்த உதாரணம்’ என்று தெரிவித்துள்ளாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் வீரா்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனா்.
மாநிலங்களவையில்...: 1971 போரில் வீரமரணடைந்த வீரா்களுக்கு மாநிலங்களவையில் மரியாதை செலுத்தப்பட்டது. மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘நமது வீரா்களின் வீரம், அா்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத மனஉறுதி, பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று வெற்றிக்கு தேசத்தை இட்டுச் சென்றது. சுதந்திரமான வங்கதேசத்தின் பிறப்புடன் நிறைவுற்ற இப்போா், நீதி, மனிதகுல கண்ணியம், சுதந்திரத்துக்கான இந்தியாவின் வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது’ என்றாா்.
‘பரம்வீா்’ காட்சியகம் திறப்பு
தாய்நாட்டுக்கான சேவையில் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தமைக்காக உயரிய ‘பரம்வீா்’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவா்களின் படங்களுடன் கூடிய ‘பரம்வீா்’ காட்சியகம், குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 21 பரம்வீா் விருதாளா்களின் படங்கள் இடம்பெற்றுள்ள இந்த காட்சியகத்தை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திறந்துவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.