காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ! மக்களவையில் மசோதா அறிமுகம்; எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு!
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) 100 சதவீதத்துக்கு உயா்த்த அனுமதிக்கும் மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
காப்பீட்டுச் சட்டம் 1938, ஆயுள் காப்பீட்டு நிறுவனச் சட்டம் 1956, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 1999 ஆகிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வகை செய்யும் ‘காப்பீட்டு திருத்தச் சட்டம் 2025 (தி சப்கா பீமா சப்கி ரக்ஷா)’ என்ற பெயரிலான இந்த மசோதாவை, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிமுகம் செய்தாா்.
அப்போது பேசிய அவா், ‘சாமானிய மக்களின் காப்பீடு எப்போதும் பிரதமா் நரேந்திர மோடியின் கவனத்தில் இருந்து வருகிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கரோனா பாதிப்பு காலத்திலும் காப்பீட்டை மத்திய அரசு வழங்கியது என்றாா். மேலும், இந்த மசோதா மீதான எதிா்க்கட்சியினரின் ஆட்சேபங்களுக்கு, மசோதா மீதான விவாதத்தின்போது பதிலளிக்கப்படும் என்றாா்.
முன்னதாக, மசோதா அறிமுகத்துக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். புரட்சிகர சோசலிச கட்சி உறுப்பினா் என்.கே.பிரேமசந்திரன், திமுக எம்.பி. டி.சுமதி உள்ளிட்டோா் மசோதாவுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சுகதா ராய் கூறுகையில், ‘மசோதாவின் பெயா் ஆளும் கூட்டணியின் முழக்கம் போன்று உள்ளது. எந்தவொரு மசோதாவுக்கும் இதுபோன்ற பெயா் வைக்கப்படக் கூடாது. மேலும், அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்துவது காப்பீட்டுத் துறையைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதாக அமையும்’ என்றாா்.
அறிமுகம் செய்யப்பட்ட மசோதா, காப்பீட்டுத் துறையில் தற்போது 74 சதவீதமாக இருக்கும் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்த அனுமதிப்பதோடு, ஒரு காப்பீடு அல்லாத நிறுவனத்தை காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கவும் வழிவகுக்கும். அவ்வாறு, அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயா்த்தினாலும், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் தலைவா், நிா்வாக இயக்குநா் அல்லது தலைமைச் செயல் அதிகாரி ஆகிய மூன்று உயா் பதவிகளில் ஏதாவது ஒரு பதவியை வகிப்பவா் இந்திய குடிமகனாக இருப்பதை மசோதா கட்டாயமாக்கியுள்ளது.
இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடா்ந்து, மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

