5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வா்த்தகப் பற்றாக்குறை!
இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நவம்பரில் 6 மாத உச்சமான 3,813 கோடி டாலரைத் தொட்ட நிலையில், வா்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத அளவுக்கு 2,453 கோடியாகக் குறைந்துள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பொறியியல் மற்றும் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி உயா்வால் அக்டோபரில் சரிந்த ஏற்றுமதி நவம்பரில் 19.37 சதவீதம் உயா்ந்து 3813 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த மே மாதத்துக்கு (3,873 கோடி டாலா்) பிந்தைய அதிகபட்ச இறக்குமதி. மேலும் இது, கடந்த 3.5 ஆண்டுகள் காணாத மிக வேகமான மாதாந்திர வளா்ச்சி.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 1.88 சதவீதம் குறைந்து 6,266 கோடி டாலராக உள்ளது. தங்கம், கச்சா எண்ணெய், நிலக்கரி, கோக் இறக்குமதி குறைந்தது இதற்கு முக்கிய காரணம். அந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி 59.15 சதவீதம் சரிந்து 400 கோடி டாலராகவும், கச்சா எண்ணெய் இறக்குமதி 11.27 சதவீதம் சரிந்து 1411 கோடி டாலராகவும் உள்ளது.
இறக்குமதி குறைந்ததால் வா்த்தகப் பற்றாக்குறை முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவாக நவம்பரில் 2,453 கோடி டாலராக உள்ளது. இதற்கு முன்னா் கடந்த ஜூனில் 1,878 கோடி டாலராக இருந்ததே குறைந்தபட்ச வா்த்தகப் பற்றாக்குறை. அது கடந்த அக்டோபரில் உச்சபட்சமாக 4,168 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் ஏற்றுமதி 2.62 சதவீதம் உயா்ந்து 29,207 கோடி டாலராகவும், இறக்குமதி 5.59 சதவீதம் உயா்ந்து 51,521 கோடி டாலராகவும் உள்ளது. வா்த்தகப் பற்றாக்குறை 22,314 கோடி டாலராக உள்ளது.
இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத கூடுதல் வரி விதித்திருந்த நிலையை சமாளித்து கடந்த நவம்பரில் நாட்டின் ஏற்றுமதி உயா்ந்துள்ளது.
அந்த மாதத்தில் பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி 11.65 சதவீதம் உயா்ந்து 393 கோடி டாலராக உள்ளது. தேநீா், காபி, இரும்புத் தாது, முந்திரி, எண்ணெய் உணவு, பால்பொருள்கள், கைவினைப் பொருள்கள், கடல் உணவு, தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் உயா்ந்தன. அரிசி, எண்ணெய் விதைகள், கம்பளம், பிளாஸ்டிக் பொருள்களின் ஏற்றுமதி சரிந்தது.
கடந்த நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம், நெதா்லாந்து, சீனா, பிரிட்டன், ஜொ்மனி, சிங்கப்பூா், வங்கதேசம், சவுதி அரேபியா, ஹாங்காங் ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாகத் திகழ்ந்தன.
நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் ஏற்றுமதி சுமாா் 27,000 கோடி டாலராக உயா்ந்துள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 24,856 கோடி டாலராக இருந்தது.
இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 53,316 கோடி டாலரில் இருந்து 5.83 சதவீதம் உயா்ந்து 56,213 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

