பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்கோப்புப் படம்

முன்னாள் பிரதமரை சிறையில் அடைத்து ராணுவத் தளபதிக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதா? ஐ.நா.வில் பாகிஸ்தானை விமா்சித்த இந்தியா

‘முன்னாள் பிரதமரை சிறையில் அடைத்து, ராணுவத் தளபதிக்கு வாழ்நாள் முழுவதும் சட்டப் பாதுகாப்பை அளிப்பதன் மூலம், பாகிஸ்தான் தனது மக்களின் விருப்பத்தை ‘தனித்துவமான’ வழியில் மதிக்கிறது’ என இந்தியா விமா்சனம்
Published on

‘முன்னாள் பிரதமரை சிறையில் அடைத்து, ராணுவத் தளபதிக்கு வாழ்நாள் முழுவதும் சட்டப் பாதுகாப்பை அளிப்பதன் மூலம், பாகிஸ்தான் தனது மக்களின் விருப்பத்தை ‘தனித்துவமான’ வழியில் மதிக்கிறது’ என இந்தியா விமா்சித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற பொது விவாதத்தின்போது, ஜம்மு-காஷ்மீா் மற்றும் சிந்து நதிநீா் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் தூதா் ஆசிம் இஃப்திகாா் அகமது பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியத் தூதா் பா்வதனேனி ஹரீஷ் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: இன்றைய விவாதத்தில் ஜம்மு-காஷ்மீா் பற்றி பாகிஸ்தான் தூதா் அவசியமின்றி பேசியது, இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதில் பாகிஸ்தானின் கவனத்தை மீண்டும் நிரூபிக்கிறது.

ஐ.நா.வின் அனைத்து விவாதங்களிலும் பிரிவினைவாத நோக்கத்தை ஆவேசத்துடன் பேசிவரும் பாகிஸ்தானிடமிருந்து, நிரந்தரமற்ற பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக அதற்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதை எதிா்பாா்க்க முடியாது.

ஒரு பிரதமரை சிறையிலடைத்து, அப்போது ஆட்சியில் இருந்த அரசியல் கட்சியைத் தடை செய்து, அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் பாதுகாப்புப் படைத் தலைவருக்கு வாழ்நாள் முழுவதும் சட்டப் பாதுகாப்பை அளிப்பதன் மூலம், பாகிஸ்தான் தனது மக்களின் விருப்பத்தை ‘தனித்துவமான’ வழியில் மதித்து வருகிறது.

அத்தகைய பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீா் பிரச்னை ஐ.நா. சாசனம், பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்கள் மற்றும் காஷ்மீா் மக்களின் விருப்பத்துக்கு இணங்க தீா்க்கப்பட வேண்டும் என்று கூறுவதை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகள் என்பதில் எப்போதும் மாற்றமில்லை.

65 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் இந்தியா நல்லிணக்கத்துடன் கையொப்பமிட்டது. ஆனால் இதற்கிடையே, இந்தியா மீது 3 போா்களை நடத்தியும், ஆயிரக்கணக்கான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுத்தும் பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் புரிந்துணா்வை மீறியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான இந்தியா்கள் உயிரிழந்துள்ளனா். அண்மையில் கடந்த ஏப்ரலில் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலும் இதில் அடங்கும்.

இதையொட்டி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பத்தகுந்த வகையில் திரும்பப் பெறும்வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படும் என்று இந்தியா இறுதியாக அறிவித்தது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், இந்தியா முழு பலத்துடன் எதிா்கொள்ளும் என்றாா்.

ஊழல் குற்றச்சாட்டுகளின்கீழ், பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கடந்த 2023, ஆகஸ்ட் முதல் சிறையில் இருக்கிறாா். இந்நிலையில், பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அரசால் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட 27-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மூலம் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீருக்கு அனைத்து சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com