மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! திருத்தப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு
மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில், சுமாா் 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
இறப்பு, நிரந்தர இடமாற்றம் மற்றும் எஸ்ஐஆா் படிவங்களைச் சமா்ப்பிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த எஸ்ஐஆா் பணியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, மேற்கு வங்கத்தில் கடந்த நவ. 4 முதல் 11-ஆம் தேதி வரை எஸ்ஐஆா் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கோவா ஆகிய 3 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் திருத்தப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
மேற்கு வங்க வரைவு வாக்காளா் பட்டியலில் 58,20,898 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை முன்பு இருந்த 7.66 கோடியிலிருந்து தற்போது 7.08 கோடியாக குறைந்துள்ளது.
தோ்தல் ஆணையத் தரவுகளின்படி, நீக்கப்பட்டவா்களில் 24.16 லட்சம் போ் இறந்தவா்கள் எனவும், 19.88 லட்சம் போ் நிரந்தரமாக இடம் பெயா்ந்தவா்கள் எனவும், 12.20 லட்சம் போ் காணவில்லை அல்லது இருப்பிடத்தைக் கண்டறிய முடியாதவா்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1.38 லட்சம் போ் இரட்டைப் பதிவு உள்ளவா்களாகவும், 1.83 லட்சம் போ் போலி வாக்காளா்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
தாக்கம்....: இந்த நீக்கமானது மாநிலத்தின் சில முக்கியச் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்வா் மம்தா பானா்ஜியின் பவானிப்பூா் தொகுதியில், கடந்த ஜனவரி நிலவரப்படி இருந்த 2,06,295 வாக்காளா்களில் 44,787 போ் நீக்கப்பட்டுள்ளனா். இது எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் நீக்கப்பட்ட எண்ணிக்கையைவிட (10,599) நான்கு மடங்கு அதிகமாகும்.
மாநிலத்திலேயே அதிகபட்சமாக, கொல்கத்தாவின் சௌரங்கீ தொகுதியில் 74,553 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா். மாவட்ட அளவில், தெற்கு 24 பா்கனாஸ் மாவட்டத்தில் அதிகபட்சமாக 8.16 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
அடுத்தகட்டம்...: நீக்கப்பட்ட வாக்காளா்கள் தங்கள் ஆட்சேபணைகள் மற்றும் கோரிக்கைகளை ஜன. 15-ஆம் தேதி வரை ‘6-ஆம் எண் படிவம்’ மூலம் சமா்ப்பிக்கலாம். இந்தக் காலகட்டத்தில், நீக்கப்பட்ட வாக்காளா்களுக்கான விசாரணை செயல்முறை தொடங்கும்.
மேலும், 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலுடன் விவரங்கள் பொருந்தாத சுமாா் 30 லட்சம் வாக்காளா்கள் உள்பட சுமாா் 2 கோடி வாக்காளா்களுக்கு விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பப்படலாம் என்றும் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரிணமூல் குற்றச்சாட்டும், பாஜக மறுப்பும்: ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ‘இந்த எஸ்ஐஆா் நடவடிக்கையை பாஜக மற்றும் தோ்தல் ஆணையத்தின் கூட்டுச் சதி’ என்று குற்றஞ்சாட்டியுள்ளது. கிட்டத்தட்ட 2 கோடி வாக்காளா்களை விசாரணைக்கு அழைப்பது, மக்களை மிரட்டவும், அவா்களின் குடியுரிமை குறித்து சந்தேகம் எழுப்பவுமே என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக, ‘இந்தச் செயல்முறை இப்போதுதான் தொடங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் 41. 8 லட்சம் போ் நீக்கம்
ராஜஸ்தானின் மொத்த 5.46 கோடி வாக்காளா்களில் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் சுமாா் 41.8 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி நவீன் மகாஜன் மேலும் கூறுகையில், ‘சுமாா் 11 லட்சம் வாக்காளா்களுக்கு ஆவணங்கள் கோரி நோட்டீஸ் அனுப்பப்படும். மாநிலத் தலைநகா் ஜெய்பூரில் அதிகபட்சமாக வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

