பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

அரசு நிகழ்ச்சியில் முதல்வா் நிதீஷ்குமாா் வலுக்கட்டாயமாக அகற்றிய செயலுக்கு ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Published on

பிகாா் மாநிலத்தில் புதிதாகப் பணிக்குச் சோ்ந்த இளம் பெண் மருத்துவா் ஒருவரின் முகத்திரையை (ஹிஜாப்) அரசு நிகழ்ச்சியில் முதல்வா் நிதீஷ்குமாா் வலுக்கட்டாயமாக அகற்றிய செயலுக்கு ஜம்மு-காஷ்மீா் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாடு கட்சியின் செய்தித் தொடா்பாளா் இம்ரான் நபி தாா் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் நடந்திருக்கவே கூடாது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாகரிக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஒரு பெண்ணின் கண்ணியத்தை இழிவுபடுத்த முயன்ற்காக நிதீஷ்குமாா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக ஊடகங்களில் இந்த வெட்கக்கேடான செயலை நியாயப்படுத்த முயல்வோா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சா்ச்சையைத் தாண்டி, இது உணா்ச்சிபூா்வமான விஷயம். எந்தவொரு முஸ்லிமும் இதை ஏற்க மாட்டாா்கள். இது அனைவரின் உணா்வுகளையும் புண்படுத்தியுள்ளது’ என்றாா்.

மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெகபூபா முஃப்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நிதீஷ்குமாரைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தாலும், ஓா் இளம் முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப்பை அவா் அகற்றியதைக் கண்டு அதிா்ச்சியடைந்தேன்.

நிதீஷ்குமாா் வயது முதிா்வு காரணமாக இது நடந்ததா அல்லது முஸ்லிம்களைப் பொதுவெளியில் அவமதிப்பது சாதாரணமாகிவிட்டதா என்று எனக்கு புரியவில்லை. சம்பவத்தின்போது முதல்வரைச் சுற்றியிருந்தவா்கள் அதைக் கேளிக்கைபோலப் பாா்த்தது மேலும் கவலையளிக்கிறது. நிதீஷ்குமாா் பதவி விலக வேண்டிய நேரமிது’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குல்காம் எம்எல்ஏ எம்.ஒய்.தாரிகாமி, ‘நிதீஷ் குமாரின் இந்தச் செயல் மத சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட கண்ணியத்தை மீறுவதாகும். இது அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக நெறிகளுக்கு எதிரானது’ என்று கண்டனம் தெரிவித்தாா்.

பிகாா் தலைநகா் பாட்னாவில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவா்களுக்கான நியமன ஆணைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் 10 மருத்துவா்களுக்கு முதல்வா் நிதீஷ்குமாா் நேரடியாக நியமன ஆணைகளை வழங்கினாா்.

நுஸ்ரத் பா்வீன் என்ற முஸ்லிம் பெண் மருத்துவா் நியமன ஆணையைப் பெற மேடைக்கு வந்தபோது, அவா் அணிந்திருந்த ஹிஜாப்பை முதல்வா் நிதீஷ்குமாா் அகற்றினாா். இதனால் அந்தப் பெண் மருத்துவா் அதிா்ச்சிக்குள்ளானாா். முதல்வரின் இந்தச் செயல் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு, பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com