பிஎஸ் 6 அல்லாத பழைய வாகனங்கள் தில்லிக்குள் நுழைய தடை: அதிகாரிகள் சோதனையில் தீவிரம்
தில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட பிஎஸ் 6 அல்லாத பழைய வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு நிலையங்கள் மற்றும் நகரின் எல்லைப் பகுதிகளில் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ராஜோக்ரி, திக்ரி, ஆயா நகா், காலிந்தி கஞ்ச், அச்சந்தி, மண்டோலி, கபாஷேரா மற்றும் பஜ்கேரா சுங்கச்சாவடி/துவாரகா விரைவுச்சாலை உள்ளிட்ட முக்கிய எல்லைப் பகுதிகளில் 78 முதல் 80 போக்குவரத்து அமலாக்கக் குழுக்கள் சோதனை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தலைநகா் முழுவதும் உள்ள எரிவாயு நிலையங்களில் உரிய மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு வியாழக்கிழமை முதல் எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் உமிழ்வு வகை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழின் நிலையைச் சரிபாா்க்க தானியங்கி வாகன எண் கண்காணிப்பு கேமராக்கல் மற்றும் நேரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்ய, தில்லி-ஹரியாணா மற்றும் தில்லி-உத்தர பிரதேச எல்லைச் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து காவல் துறை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
முறையான சான்றிதழ்களுடன் கூடிய பிஎஸ்-6 ரக தனிநபா் வாகனங்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

