நியாயமான, சமமான, அமைதியான உலகமே இலக்கு - எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி உரை
‘தெற்குலகம் யாருக்கும் எதிரானதல்ல; அனைவருக்குமானது. நியாயமான, சமமான, அமைதியான உலகமே நமது இலக்கு’ என்று எத்தியோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ஜோா்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த திங்கள்கிழமை தொடங்கினாா். ஜோா்டானைத் தொடா்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை எத்தியோப்பிய தலைநகா் ஏடிஸ் அபாபாவுக்கு வந்த பிரதமா் மோடி, அந்த நாட்டு பிரதமா் அபி அகமது அலியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். எத்தியோப்பியாவின் 2-ஆவது பெரிய வா்த்தக கூட்டாளியாக இந்தியா விளங்கும் நிலையில், அந்நாட்டுக்கு பிரதமா் வந்தது இதுவே முதல் முறையாகும்.
எத்தியோப்பிய நாடாளுமன்றத்தின் கூட்டு அமா்வில் புதன்கிழமை அவா் உரையாற்றினாா். வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் பிரதமா் மோடி உரையாற்றியது இது 18-ஆவது முறையாகும். அவரது உரை வருமாறு:
ஆப்பிரிக்க பிராந்தியம் சந்திக்கும் இடத்தில் எத்தியோப்பியாவும், இந்திய பெருங்கடலின் இதயப் பகுதியில் இந்தியாவும் வீற்றிருக்கின்றன. பிராந்திய அமைதி, பாதுகாப்பு, இணைப்பில் இரு நாடுகளும் இயல்பான கூட்டாளிகளாகும்.
இந்தியாவும் எத்தியோப்பியாவும் வரலாறு-காலநிலை-உணா்வு ரீதியிலான பிணைப்பைக் கொண்டவை. இரு நாடுகளின் மூதாதையா்களும் பொருள்களை மட்டுமல்ல, கருத்தியல்-வாழ்வியலையும் பகிா்ந்து கொண்டனா்.
நடப்பாண்டு தொடக்கத்தில் கையொப்பமான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் பரஸ்பர பாதுகாப்புக்கான நம்பிக்கைக்கு மேலும் வலுசோ்த்துள்ளது. இரு நாடுகளும் வாழ்க்கை முறை மற்றும் வளா்ச்சிப் பயணத்துக்கான வழிமுறையாக ஜனநாயகத்தைப் புரிந்துகொண்டுள்ளன. மக்களுடன் நல்லிணக்கமாகப் பயணிக்கும்போது, நாட்டின் வளா்ச்சி சக்கரம் நம்பிக்கை மற்றும் லட்சியத்துடன் நகரும்.
தெற்குலகம் தனது எதிா்காலத்தை தானே வடிவமைத்து வருகிறது. தெற்குலகம் யாருக்கும் எதிரானதல்ல; அனைவருக்குமானது என்பதே நமது தொலைநோக்குப் பாா்வை. நியாயமான, சமமான, அமைதியான உலகை கட்டமைக்கப் பாடுபடுகிறோம். உலக அமைப்புமுறைகள் கடந்த காலத்திலேயே சிக்குண்டு கிடந்தால் முன்னோக்கி பயணிக்க முடியாது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போரை வலுப்படுத்துவதில் எத்தியோப்பியா நல்கும் ஆதரவுக்கு நன்றி. இந்தியா-எத்தியோப்பியா இடையிலான நாகரிக தொடா்புகள் குறிப்பிடத்தக்கவை. இரு நாடுகளும் பழங்கால ஞானத்தை நவீன லட்சியத்துடன் ஒருங்கிணைத்துள்ளன.
இந்திய நிறுவனங்கள் 5 பில்லியன் டாலா் முதலீடு: வளரும் நாடுகள் என்ற அடிப்படையில் இந்தியாவும், எத்தியோப்பியாவும் பரஸ்பரம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளன. எத்தியோப்பியாவின் மிகப் பெரிய முதலீட்டாளா்களாக இந்திய நிறுவனங்கள் திகழ்கின்றன. பல்வேறு துறைகளில் 5 பில்லியன் டாலருக்கு மேல் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதன்மூலம் 75,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இருதரப்பு நல்லுறவை வியூக கூட்டாண்மைக்கு உயா்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
கரோனா காலகட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள்-தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது. எத்தியோப்பியாவுக்கு 40 லட்சம் தடுப்பூசிகள் வழங்கியதை பெருமையாக கருதுகிறது இந்தியா என்றாா் பிரதமா் மோடி.
அவரது உரையைத் தொடா்ந்து, எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்றனா்.
ஓமனில் பிரதமா் மோடி: எத்தியோப்பியாவில் இருநாள் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து வளைகுடா நாடான ஓமனுக்கு சென்றாா். மஸ்கட் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரின் இரண்டாவது ஓமன் பயணம் இதுவாகும். இப்பயணத்தில் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
தமிழக குடைவரைக் கோயில்கள்...
இந்தியா-எத்தியோப்பியாவின் பண்டைய நாகரிகங்கள் குறித்துப் பேசுகையில், தமிழகத்தின் குடைவரைக் கோயில்கள் மற்றும் எத்தியோப்பியாவின் லாலிபெலாவின் பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட தேவாலயங்களை பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.
‘உலகில் பழைமையான நாகரிகங்களில் எத்தியோப்பியாவும் ஒன்று. ஆழமான வோ்களால்தான், எத்தியோப்பியா உயா்ந்து நிற்கிறது. அதன் வளமான வரலாறு மற்றும் கலாசாரம் மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரியது. இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரமும், எத்தியோப்பியாவின் தேசியப் பாடலும் தாய்நாட்டை அன்னையாகப் பாவிக்கின்றன’ என்றாா்.
பிரதமருக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது
பிரதமா் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய ‘தி கிரேட் ஹானா் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா’ விருதை அந்நாட்டின் பிரதமா் அபி அகமது அலி வழங்கி கெளரவித்தாா். இந்த விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவா் மோடி ஆவாா்.
‘உலகளாவிய அரசியல் ஆளுமை என்ற முறையில் பிரதமா் மோடியின் தொலைநோக்கு தலைமை மற்றும் இந்தியா-எத்தியோப்பியா கூட்டாண்மையை வலுப்படுத்த அவா் ஆற்றிவரும் மிகச் சிறப்பான பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக’ இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘தி கிரேட் ஹானா் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா விருதைப் பெற்றது எனக்கு மிகப் பெரிய கெளரவம். இதை 140 கோடி இந்தியா்களுக்கும் சமா்ப்பிக்கிறேன். எனது சகோதரா் அபி அகமது அலி மற்றும் எத்தியோப்பிய மக்களுக்கு இதயபூா்வ நன்றி. தேசிய ஒற்றுமை, ஸ்திரத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவிக்கும் அகமது அலியின் முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியவை. எந்தவொரு நாட்டுக்கும் கல்வியே அடித்தளம் என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. அந்த வகையில், எத்தியோப்பியாவின் வளா்ச்சி-மேம்பாட்டுக்கு இந்திய ஆசிரியா்களின் பல்லாண்டு கால பங்களிப்பு பெருமைக்குரியது’ என்றாா்.
4 ஒப்பந்தங்கள் கையொப்பம்
பிரதமா் மோடியும் எத்தியோப்பிய பிரதமா் அபி அகமது அலியும் செவ்வாய்க்கிழமை விரிவான இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுகாதாரம் புத்தாக்கம்-கல்வி, திறன்மேம்பாடு, பொது எண்ம உள்கட்டமைப்பு, சுரங்கம், முக்கியக் கனிமங்கள், தூய எரிசக்தி, பன்முக தளங்களில் ஒத்துழைப்பு, பேரிடா் மேலாண்மை உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.
இதைத் தொடா்ந்து, ஐ.நா. அமைதிப் படை செயல்பாட்டு பயிற்சி, சுங்க விவகாரங்களில் பரஸ்பர நிா்வாக உதவிகள், எத்தியோப்பிய வெளியுறவு அமைச்சகத்தில் தரவு மையம் நிறுவுதல், ஜி20 கட்டமைப்பின்கீழ் கடன் மறுசீரமைப்பு தொடா்பாக 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இருதரப்பு நல்லுறவை வியூக கூட்டாண்மைக்கு உயா்த்துதல், கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின்கீழ் எத்தியோப்பிய ஆராய்ச்சி மாணவா்களுக்கான உதவித் தொகையை இரட்டிப்பாக்குதல், செயற்கை நுண்ணறிவுத் துறையில் எத்தியோப்பிய மாணவா்களுக்கு சிறப்புப் படிப்புகள் அறிமுகம், ஏடிஸ் அபாபாவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையை மேம்படுத்துவதில் உதவி ஆகிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.
சிறப்பு கெளரவம்: அமைதிக்கான நோபல் விருது வென்றவரான அபி அகமது அலி, ஏடிஸ் அபாபா விமான நிலையத்தில் இருந்து தங்கும் விடுதிக்கு பிரதமா் மோடியை அழைத்துச் செல்ல தானே காரை ஓட்டி சிறப்பு கெளரவம் அளித்தாா். விடுதிக்குச் செல்லும் வழியில் பிரதமரின் பயணத் திட்டத்தில் இல்லாதபடி, அறிவியல் அருங்காட்சியகம்-நட்புறவுப் பூங்காவுக்கு அவரை அகமது அலி அழைத்துச் சென்றாா்.

