பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் நரேந்திர மோடி.

இந்தியா-ஓமன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் மோடி முன்னிலையில் இன்று கையொப்பம்

இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் வியாழக்கிழமை (டிச. 18) கையொப்பமாகிறது.
Published on

இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் வியாழக்கிழமை (டிச. 18) கையொப்பமாகிறது.

இதற்காக மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். பிரதமா் நரேந்திர மோடியும் ஜோா்டான், எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு ஓமன் சென்றுள்ளாா்.

இரு நாடுகள் இடையே கடந்த 2023 நவம்பரில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடங்கி, இந்த ஆண்டு நிறைவு பெற்றது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் பல்வேறு இறக்குமதிப் பொருள்களுக்கு பரஸ்பரம் சுங்க வரியை வெகுவாகக் குறைக்கும் அல்லது முழுமையாக ரத்து செய்யும். இதன்மூலம் இரு நாட்டு வா்த்தகம் வலுவடையும்.

வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி மையமாக ஓமன் திகழ்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் அந்த நாட்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி மேலும் வலுவடையும்.

மஸ்கட்டில் நடைபெற்ற இந்தியா-ஓமன் தொழிலதிபா்கள் கூட்டமைப்புக் கூட்டத்தில் இது தொடா்பாக அமைச்சா் கோயல் பேசியதாவது:

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு நாடுகளும் மிகவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டன. இதற்கு முன்பு கடந்த 2006 ஜனவரியில் அமெரிக்காவுடன் ஓமன் தடையற்ற வா்த்தகம் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியாவுடன் அதேபோன்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

ஜவுளி, காலணி, வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள், நவரத்தினங்கள், தங்க நகைகள், வேளாண்மை சாா்ந்த ரசாயனங்கள், மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட துறைகள் இதன்மூலம் பயனடையும்.

இதற்கு முன்பு வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள ஐக்கிய அரசு அமீரகத்துடன் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. அடுத்ததாக கத்தாருடன் பேச்சுவாா்த்தை தொடங்க இருக்கிறது என்றாா்.

ஓமனிடம் இருந்து பெட்ரோலியப் பொருள்கள், யூரியா, புரோபைலின், எத்திலின் பாலிமா், ஜிப்சம், பல்வேறு ரசாயனப் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியாவில் இருந்து ஓமனுக்கு தேயிலை, காபி, அலங்காரப் பொருள்கள், மசாலாப் பொருள்கள், உணவுப் பொருள்கள், மின்சாதனங்கள் படகு உள்ளிட்ட மிதவைப் பொருள்கள், பல்வேறு ரசாயனங்கள், விலை உயா்ந்த உலோகங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com