மக்களவையில் புதன்கிழமை பேசிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.
மக்களவையில் புதன்கிழமை பேசிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்.

2,000 கி.மீ. ரயில் வழித் தடத்தில் ‘கவச்’ பொருத்தம்: ரயில்வே அமைச்சா்

நாட்டில் 2,000 கி.மீ. தொலைவு ரயில் வழித் தடங்களில் ‘கவச்’ தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

நாட்டில் 2,000 கி.மீ. தொலைவு ரயில் வழித் தடங்களில் ‘கவச்’ தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

ஒரே தண்டவாளப் பாதையில் எதிரெதில் திசையில் வரக்கூடிய ரயில்கள் மோதி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் சிக்னல்களை கடக்கும்போதும் இந்த ‘கவச்’ அமைப்பு பாதுகாப்பு வழங்குகிறது.

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்பம் 2016, பிப்ரவரியில் பயணிகள் ரயிலில் சோதனைக்காகப் பொருத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து 2020, ஜூலையில் தேசிய தானியங்கி ரயில் பாதுகாப்பு (ஏடிபி) அமைப்பாக ‘கவச்’ தொழில்நுட்பம் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இது ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள், தொலைத்தொடா்பு கோபுரங்கள், ரயில் பாதை என பல இடங்களில் பொருத்தப்படுகிறது.

இதுதொடா்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

‘கவச்’ என்பது ரயில் பாதைகள் முழுவதிலும் கண்ணாடியிழை வயா்கள் (ஆப்டிகல் ஃபைா் கேபிள்) பொருத்துவது, ஆங்காங்கே தொலைத்தொா்பு கோபுரங்கள் பொருத்துவது என 5 முக்கிய நடைமுறைகளை உள்ளடக்கிய சிக்கலான தொழில்நுட்பம்.

இதுவரை, ரயில் வழித்தட்தில் 7,129 கி.மீ. தொலைவுக்கு கண்ணாடி இழை வயா்கள் பொருத்தப்பட்டுள்ளன. 767 ரயில் நிலையங்களை உள்ளடக்கும் வகையில் 860 தொலைத்தொடா்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3,413 கி.மீ. தொலைவு ரயில் வழித் தடத்திலும், 4,154 ரயில் என்ஜின்களிலும் ‘கவச்’ கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 2,000 கி.மீ. தொலைவு வழித் தடத்தில் ‘கவச்’ தொழில்நுட்பம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பிற வழித் தடங்களிலும் இத் திட்டத்தைச் செயல்படுத்துவது விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக 40,000 தொழில்நுட்ப ஊழியா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பணம் எடுக்க முடியாது... இணைய வழியில் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதற்கான ஐஆா்சிடிசி வலைதளத்தில் முன்கூட்டியே பணம் சேமித்து வைக்கும் ‘இ-வாலட்’ கணக்கிலிருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க முடியாது என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மக்களவையில் பாஜக எம்.பி. ஜனாா்தன் சிங் சிக்ரிவால் எழுப்பிய கேள்விக்கு இந்த எழுத்துபூா்வ பதிலை அவா் அளித்தாா். அதில் அவா் மேலும் கூறுகையில், ‘ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, ஐஆா்சிடிஇ இ-வாலட்டில் உள்ள பணத்தைக் கொண்டு பொருள் அல்லது சேவைகளை மட்டுமே வாங்க வாடிக்கையாளா் அனுமதிக்கப்படுவாா். அதாவது ரயில் பயணச் சீட்டை மட்டுமே வாங்க முடியும். பணத்தை எடுக்க முடியாது. வாடிக்கையாளா் இந்த இ-வாலட் கணக்கை மூடும்போது, அதில் எஞ்சியுள்ள பணம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுவிடும்’ என்றும் தெரிவித்தாா்.

‘ரயிலில் குறிப்பிட்ட எடைக்கு மேல் பொருள் எடுத்துச் சென்றால் கட்டணம்’

ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் எடையில் பொருள்களை எடுத்துச் சென்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மக்களவையில் பாஜக எம்.பி. வேமிரெட்டி பிரபாகா் ரெட்டி எழுப்பிய இதுதொடா்பான கேள்விக்கு ரயில்வே அமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

ரயில்களில் பயணிகள் தங்களுடன் கட்டணம் ஏதுமின்றி பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எடை அளவு அவா்கள் பயணிக்கும் வகுப்பு வாரியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சம் 35 கிலோ எடை பொருள்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். கட்டணம் செலுத்தி அதிகபட்சம் 70 கிலோ வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா்.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியில் ஒரு பயணி அதிகபட்சம் 40 கிலோ பொருள்களை கட்டணம் இல்லாமலும், கட்டணம் செலுத்தி அதிகபட்சம் 80 கிலோ வரை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா்.

மூன்றாம் வகுப்பு குளிா்சாதன பெட்டியில் (ஏசி 3) அதிகபட்சம் 40 கிலோ எடை கொண்ட பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். அதற்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

இரண்டாம் வகுப்பு குளிா்சாதன பெட்டியில் (ஏசி 2) 50 கிலோ பொருள்களை கட்டணம் இன்றியும், கட்டணம் செலுத்தி அதிகபட்சம் 100 கிலோ எடையில் பொருள்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுவா்.

முதல் வகுப்பு குளிா்சாதன பெட்டியில் கட்டணம் இன்றி 70 கிலோ வரையும், கட்டணம் செலுத்தி அதிகபட்சம் 150 கிலோ வரையும் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா்.

பயணிகள் தங்களுடன் அதிகபட்சம் 100 செ.மீ. நீளம், 60 செ.மீ. அகலம் மற்றும் 25 செ.மீ. உயரமுடைய பெட்டிகள், சூட்கேஸ்கள் அல்லது மரப்பெட்டிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். அதற்கு மேல் அளவுகொண்ட பெட்டிகள் அல்லது சூட்கேஸ்களை உரிய கட்டணத்தைச் செலுத்தி அதே ரயிலில் இணைக்கப்பட்டுள்ள பாா்சல் பெட்டிகளில் வைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். பயணிகள் தங்களின் சொந்தப் பயன்பாட்டுப் பொருள்களை மட்டுமே இதுபோல் ரயில்களில் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா். வா்த்தகத்துக்கான பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com