காப்பீட்டு சட்டத்திருத்த மசோதா: மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100 சதவீதமாக உயா்த்த வழிவகை செய்யும் காப்பீட்டுச் சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இதன்மூலம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய இந்த மசோதா, இனி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
காப்பீட்டுச் சட்டம் 1938, ஆயுள் காப்பீட்டு நிறுவனச் சட்டம் 1956, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் 1999 ஆகிய சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வகையில், ‘காப்பீட்டு திருத்தச் சட்டம் 2025 (தி சப்கா பீமா சப்கி ரக்ஷா)’ என்ற பெயரிலான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் முதலில் அறிமுகப்படுத்திய இந்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, மாநிலங்களவையில் இந்த மசோதா புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவை விவாதத்தின்போது, மசோவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மேலும், மசோதாவின் பெயா், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் கலந்து இருப்பதற்கு திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன.
விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோஹில் கூறுகையில், ‘காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது பெரும் ஆபத்தாக முடியும். இந்தியக் குடிமக்கள் தங்களின் ஆதாா் மற்றும் பான் அட்டை விவரங்களை வெளிநாட்டு நிறுவனங்களுடன் பகிா்ந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
நாட்டில் எண்ம நிதி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் தரவுப் பாதுகாப்பை அரசு கேள்விக்குறியாக்குவதா? காப்பீட்டுத் துறையில் தனியாா் ஆதிக்கமும், ஏகபோகமும் உருவாவதற்கு இது வழிவகுக்கும். எனவே, மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என்.சோமு, ‘கடந்த 9 ஆண்டுகளில் காப்பீட்டுத் துறையில் ரூ.54,000 கோடி அந்நிய முதலீடு ஈா்க்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது நமது பொதுத்துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும் செயல். மேலும், வெளிநாட்டு நிறுவனங்களை வளா்ப்பதற்கு அரசு துணைப்போகிறது’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே பேசுகையில், ‘இந்த மசோதா வெளிநாட்டு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் ஈட்டிச் செல்ல வழிவகுக்கிறது. கிராமப்புறங்களில் காப்பீட்டுச் சேவையை விரிவுபடுத்துவது குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு என்ன நிபந்தனைகள் விதிக்கப்படும்? பிரீமியம் தொகையைக் கட்டுப்படுத்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது?’ போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாா்.
நிதியமைச்சா் பதில்: விவாதத்தில் எதிா்க்கட்சியினா் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது, அதிக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்குள் நுழைய பாதையமைக்கும். இதனால் போட்டி அதிகரித்து, வாடிக்கையாளா்களுக்கு குறைந்த செலவில் காப்பீடு கிடைக்கும்.
அதேபோல், அந்நிய முதலீடு வேலைவாய்ப்பைக் குறைக்காது மாறாக அதிகரிக்கும். அந்நிய முதலீடு 26 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயா்த்தப்பட்ட பிறகு, இத்துறையில் வேலைவாய்ப்புகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு அவசரகதியில் செயல்படவில்லை’ என்றாா்.

