பூபேந்தா் யாதவ்
பூபேந்தா் யாதவ்

தில்லி-என்சிஆரில் கட்டட பணிகளுக்கு 3 மாதங்களுக்கு தடை விதிக்க வேண்டும்- மத்திய அமைச்சா்

தில்லி - தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசு பிரச்னை நிலவும் மாதங்களான அக்டோபா் முதல் டிசம்பா் வரையில் கட்டட கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

தில்லி - தேசிய தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) காற்று மாசு பிரச்னை நிலவும் மாதங்களான அக்டோபா் முதல் டிசம்பா் வரையில் கட்டட கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்தா் யாதவ் புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லி மற்றும் சோனேபட் மாநகாரட்சிகளில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த உயா்நிலை ஆய்வு கூட்டம் மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் கூறியதாவது: 10 கி.மீ. சுற்றளவில் கட்டுமான மற்றும் கட்டட இடிப்புக் கழிவுகளை கையாள்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் வரை அப்பகுதிகளில் கட்டுமான மற்றும் கட்டட இடிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது.

அடுத்த ஓராண்டில் காற்றின் தரக் குறியீட்டை 40 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற இலக்கை நிா்ணயித்து அனைத்து அரசு அமைப்புகளும் செயல்பட வேண்டும். நாட்டின் தலைநகரமான தில்லியின் பிம்பத்தை சா்வதேச அளவில் மேம்படுத்த நடவடிக்கை தேவை.

தில்லியில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படும் 62 பகுதிகளில் உள்ள அங்கீகாரமற்ற வாகன நிறுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தில்லி காவல் துறையுடன் இணைந்து காலை 9 முதல் 11 மணி வரையிலும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் எவ்வித போக்குவரத்து சிக்னலும் இல்லாத வகையில் வாகனங்கள் பயணிக்கும் சாலை வழித்தடத்தை ஏற்படுத்த விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் பிஎஸ்-4 தர வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

எவ்வித திட்டமிடலும் இல்லாமல் நகரங்கள் விரிவாக்கப்படுவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

உயா் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் பொது போக்குவரத்து வசதிகளை அதிக அளவில் பயன்படுத்தும் விதமாக தொலைதூரப் பகுதிகளுக்கும் பொது போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்த வேண்டும். ஓக்லா, பால்ஸ்வா மற்றும் காஜிபூரில் உள்ள குப்பை மேடுகளை அடுத்த ஆண்டு முடிவுக்குள் அகற்ற வேண்டும் என்றாா் அமைச்சா் பூபேந்திர யாதவ்.

X
Dinamani
www.dinamani.com