நேஷனல் ஹெரால்ட் வழக்கு: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் நிராகரித்ததை வரவேற்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்தார்.
இந்த வழக்கின் நோக்கம், காந்தி குடும்பத்தை துன்புறுத்தவும், எதிர்க்கட்சிகளை குறிவைப்பதும்தான் என்று அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.
இந்த நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து கார்கே பேசியதாவது:
“இந்தத் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உண்மை எப்போதும் வெல்லும். பழிவாங்கும் மனப்பான்மையுடன் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு மோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டும். இது அவர்கள் முகத்தில் விழுந்த அறை போன்றது.
இதுபோன்ற செயல்களை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.” எனத் தெரிவித்தார்.
கார்கேவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ”பழிவாங்கும் அரசியலை நாங்கள் அம்பலப்படுத்துவோம். நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர், அவர்கள் தங்கள் பலத்தை வெளிப்படுத்துவார்கள்” என்றார்.
நீதிமன்ற தீர்ப்பு
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது. இந்நிலையில், 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘யங் இந்தியன்’ நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா். இதையடுத்து, ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து, அந்தக் கடன் தொகைக்காக ஏஜேஎல் நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதா என்று கண்டறிய அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில், தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ‘சோனியா, ராகுலுக்கு யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சோனியா, ராகுல் உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக’ குறிப்பிடப்பட்டது.
இந்தக் குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக தில்லி சிறப்பு நீதிமன்றம் தொடா் விசாரணையை மேற்கொண்டது. விசாரணையின் முடிவில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, “இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) அடிப்படையில் அல்லாமல் தனிநபா் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதை சட்டப்படி அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டு, அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க முடியாது.” எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.