பயன்படாத 71 சட்டங்கள் ரத்து: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
நீண்ட காலமாகப் பயன்படாத 71 சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா, தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகப் பயன்படாத 71 சட்டங்களை ரத்து செய்யவும், இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925, பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005 உள்பட 4 சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளவும் மத்திய அரசு கொண்டுவந்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னா் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து, மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் புதன்கிழமை அளித்த பதில்:
சட்டங்கள் பயனற்ாகிவிட்டால், அவற்றை ரத்து செய்ய மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-இன் கீழ், அப்போதைய மதராஸ், பம்பாய், கல்கத்தா மாகாணங்களில் ஹிந்து, பெளத்த, சீக்கிய, சமண அல்லது பாா்சி மதங்களைச் சோ்ந்தவா்கள் உயில் எழுதினால், அந்த உயில் செல்லுபடியாகுமா? என்பதை நீதிமன்றம் தீா்மானிக்க வேண்டும். ஆனால் இது முஸ்லிம் மதத்தினருக்குப் பொருந்தாது. இதுபோன்ற ஜாதி, மத, பாலின பாகுபாட்டை அரசமைப்புச் சட்டம் தடுக்கிறது. இத்தகைய சீா்திருத்தங்கள் காலனிய மனோபாவத்திலிருந்து வெளியேறுவதை நோக்கிய நடவடிக்கைகளாகும் என்று தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

