

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை:
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் வேகமாகக் கடந்து செல்ல வழிவகை செய்யும் புதிய சுங்கக்கட்டண வசூல் முறை அடுத்தாண்டு இறுதிக்குள் அமலாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்று புதன்கிழமை(டிச. 17) மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
வாகனங்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது வாகனப் பதிவெண் தட்டை செயற்கைக்கோள், ஏஐ தொழில்நுட்பம், ஃபாஸ்டேக் உதவியுடன் ஆய்வு செய்து கட்டணம் வசூலிக்கப்படும் எம்.எல்.எஃப்.எஃப். திட்டம் குறித்து மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிடும்போது, ‘இத்திட்டத்தால் ரூ. 1,500 கோடியிலான எரிபொருள் மிச்சமாகும் என்றும், ரூ. 6,000 கோடியை அரசுக்கு வருவாயாக அளிக்கும் என்றும்’ தெரிவித்தார்.
சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையில் மாற்றம்:
அவர் அளித்துள்ள பதிலில், “முன்னதாக, சுங்கச்சவடிகளை நெருங்கியதும் வாகனங்கள் கடந்து செல்ல சராசரியாக 3 - 10 நிமிடங்கள் வரை எடுக்கும். அதன்பின், ஃபாஸ்ட் டேக் அறிமுகப்படுத்தப்பட்டதால், மேற்குறிப்பிட்ட கால அவகாசம் 60 விநாடிகளுக்குள்ளே குறைக்கப்பட்டுள்ளது. இதனால், நமது வருவாயும் குறைந்தபட்சம் ரூ. 5,000 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், எம்.எல்.எஃப்.எஃப். எனப்படும் பல்வழித்தட சுங்க நடைமுறை திட்டமானது அமலானால், ஃபாஸ்டேக் முறைக்கு மாற்றாக இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துவிடும். அப்போது, வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் கடந்து செல்ல முடியும். எந்தவொரு வாகனமும் சுங்கச்சாவடிகளில் நிறுத்தப்படாது. 2026-ஆம் ஆண்டிறுதிக்குள் இந்த திட்டம் 100 சதவீதம் நிறைவடைந்துவிடும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.