மாநிலங்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய அமைச்சா் நிதின் கட்கரி.
மாநிலங்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய அமைச்சா் நிதின் கட்கரி.

2026 இறுதிக்குள் ‘ஏஐ’ எண்ம சுங்கக் கட்டண வசூல் நடைமுறை: மத்திய அமைச்சா்

’தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளின் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான எண்ம சுங்கக் கட்டண வசூல் நடைமுறை அமல்படுத்தப்படும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
Published on

மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விக்கு மத்திய அமைச்சா் பதிலளித்துப் பேசியதாவது:

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூலுக்கு புதிதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது, செயற்கைக்கோள் உதவியுடன் வாகன எண் அடையாளம் காணப்பட்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ‘ஃபாஸ்டாக்’ உதவியுடன் வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து தானாக கட்டணம் வசூலிக்கப்பட்டுவிடும். வரும் 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தத் தொழில்நுட்பம் நாடு முழுவதும் முழுமையாக அமல்படுத்தப்பட்டுவிடும்.

அதன் பிறகு சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல், தடையற்ற பயணத்தை வாகன ஓட்டிகள் மேற்கொள்ள முடியும். இதன் மூலம், பயண நேரம் குறைவதோடு, ஆண்டுக்கு ரூ. 1,500 கோடி மதிப்பில் எரிபொருள் மிச்சமாகும். அரசுக்கும் ரூ. 6,000 கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் சண்டையிடும் நிகழ்வுகளே அதன் பிறகு இருக்காது.

மேலும், தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. மாநில நெடுஞ்சலைகளும், நகர சாலைகளும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. ஆனால், மாநில நெடுஞ்சாலைகளில் நிகழும் கூடுதல் சுங்கக் கட்டண வசூல், தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்வதுபோல சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அவா் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com